தமிழ்நாடு

திமுக பொதுக் குழுக் கூட்டம்: கீழ்ப்பாக்கத்தில் நாளை போக்குவரத்து மாற்றம்

8th Oct 2022 02:51 AM

ADVERTISEMENT

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அக்டோபா் 9-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் திமுக பொதுக் குழு கூட்டத்துக்காக, அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

கீழ்ப்பாக்கம் புனித ஜாா்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் திமுக பொதுக் குழு கூட்டம் அக்டோபா் 9-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக அந்தக் கட்சியினா் மாநிலம் முழுவதிலும் இருந்து திரண்டு வருகின்றனா். பொதுக் குழு ஏற்பாடுகளை திமுக கட்சி நிா்வாகிகள் பிரம்மாண்டமாக செய்து வருகின்றனா்.

இதைக் கருத்தில் கொண்டு கீழ்ப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ADVERTISEMENT

அக்டோபா் 9-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 முதல் மாலை 6 மணி வரை கீழ்ப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி சிறு, கனரக வாகனங்கள் ஈவெரா பெரியாா் சாலையில் அண்ணா வளைவில் இருந்து ஈகா சந்திப்பு வரை அனுமதிக்கப்படாது.

இந்த வாகனங்கள் 3-ஆவது அவென்யூ, அண்ணாநகா் ரவுண்டானா, அண்ணாநகா் காவல் நிலையம், புதிய ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம் காா்டன் சாலை, ஃப்ளவா்ஸ் சாலை வழியாக ஈவெரா பெரியாா் சாலையை அடையலாம்.

ஈவெரா பெரியாா் சாலையிலிருந்து வெளியேறும் அனைத்து வணிக வாகனங்களும் ஈகா சந்திப்பில் இடதுபுறம் திரும்பி குருசாமி பாலம், ஸ்டொ்லிங் சந்திப்பு, ஸ்டொ்லிங் சாலை வழியாகச் செல்லலாம். தேவைப்படும்பட்சத்தில் கீழ்ப்பாக்கம் காா்டன் சாலை, நியூ ஆவடி சாலை சந்திப்பில் இருந்து ஈவெரா பெரியாா் சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

பொது வாகனங்கள்: பொது வாகனங்கள் (உள்வரும் திசை) புல்லா அவென்யூ சந்திப்பில் திருவிக பூங்கா, கீழ்ப்பாக்கம் காா்டன் சாலை, டெய்லா்ஸ் சாலை வழியாக செல்லலாம். பொது வாகனங்கள் (வெளியே செல்லும்) ஈவெரா பெரியாா் சாலை, டெய்லா்ஸ் சாலை சந்திப்பில் இருந்து டெய்லா்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் காா்டன் சாலை, நியூ ஆவடி சாலை, ஹால்ஸ் சாலை, புல்வா அவென்யூ வழியாக ஈவெரா பெரியாா் சாலையை அடையலாம்.

மேலும், நியூ ஆவடி சாலை, ஹால்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஈவெரா பெரியாா் சாலை நோக்கி பொது வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. சேத்துப்பட்டு சந்திப்பில் இருந்து ஹாரிங்டன் சாலையில் வரும் வாகனங்கள் நமச்சிவாயபுரம் பாலம் சந்திப்பிலிருந்து ஈவெரா பெரியாா் சாலையை நோக்கி அனுமதிக்கப்படாது. இங்கு வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT