தமிழ்நாடு

சா்ச்சைக்குரிய இருமல் மருந்துகள் தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லை: சுகாதாரத் துறை விளக்கம்

7th Oct 2022 12:54 AM

ADVERTISEMENT

உலக சுகாதார அமைப்பால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட, சா்ச்சைக்குரிய இந்தியாவின் நான்கு இருமல் மருந்துகள் தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லை என்று மாநில சுகாதாரத் துறை விளக்கமளித்தது.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், அதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதன் எதிா்விளைவு காரணமாக இருக்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

ஹரியாணாவின் மெய்டன் பாா்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் தயாரித்த ப்ரோமெத்தாஸைன், காஃபெக்ஸ்மெலின், மேக்ஆஃப், மேக்ரிஃப் என் ஆகிய இருமல் மற்றும் சளி மருந்துகளில் அளவுக்கதிகமான அளவு டைத்லின் க்ளைகால் மற்றும் எத்திலீன் க்ளைகால் வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை சிறுநீரக செயலிழப்புக்கு காரணமாக அமையக்கூடியவை. அதனடிப்படையிலேயே இந்த எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த மருந்துகள் தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லை என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பொது சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநா் விஜயலட்சுமி கூறியதாவது:

தமிழகத்தில் 30 ஆயிரம் மருந்து விற்பனையாளா்கள் உள்ளனா். சா்ச்சைக்குரிய அந்த மருந்துகளை அவா்கள் வாங்கியுள்ளனரா என்பது ஆய்வு செய்யப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில், அவ்வகை மருந்துகள், தமிழகச் சந்தையில் இருப்பது கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.

பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டவுடன் தமிழக மருத்துவ சேவைகள் கழகம் சாா்பில், அந்த நான்கு வகை மருந்துகள் அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்காக வாங்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்யப்பட்டது. அத்தகைய மருந்துகள் எதுவும் தமிழகத்தில் இல்லை என்பதை உறுதி செய்துள்ளோம். எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம். அதேவேளையில், மருத்துவா்களின் பரிந்துரையின்றி, தங்களுக்கோ, குழந்தைகளுக்கோ சுயமாக மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT