தமிழ்நாடு

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் வீட்டில் என்ஐஏ சோதனை!

DIN

சேலம்: சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டில் என்ஐஏ போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு   காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி, கத்தி, முகமூடி உள்ளிட்ட பொருள்களுடன் வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் சேலம் மாநகரைச் சேர்ந்த நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் என்பதும், நண்பர்களான இருவரும் சேலம் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடைகைக்கு எடுத்து யூடியூப் பார்த்து, வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்த துப்பாக்கி, கத்தி, முக மூடி மற்றும் துப்பாக்கி செய்வதற்கான உபகரணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனையடுத்து இந்த வழக்கு என்ஐஏ  விசாரணைக்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இயற்கையை அழிக்கும் விதமாக சேலம் மாவட்டம் ஊத்துமலை அருகில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அதற்குச் செல்லும் லாரியில் வெடிகுண்டு வைப்பதற்கு திட்டம் தீட்டியது தெரியவந்தது. 

மேலும் இருவரும் புரட்சியாளர்களாக மாறும் நோக்கத்தில், துப்பாக்கி தயாரித்ததாகவும், சாமானிய மனிதனில் இருந்து நீதிபதிகள் வரை தவறுகள் நடப்பதால், மனித மாண்புகளையும், இயற்கை மற்றும் அனைத்து உயிரினங்களையும் காப்பதற்கு இருவரும் ஒன்று சேர்ந்ததாகவும் கூறியுள்ளனர். 

மேலும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், சந்தனக் கடத்தல் வீரப்பன் ஆகியோர் வழியில், சாமானிய மக்களை காக்கும் நோக்கத்தில் புரட்சியாளர்களாக மாறுவதற்காக துப்பாக்கிகளை தயாரித்ததாக தெரிவித்துள்ளனர். 

கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கபிலர் என்ற வாலிபர் துப்பாக்கி தயாரிக்க துணையாக இருந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கபிலரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அவர்கள் எதற்காக துப்பாக்கி தயாரித்தார்கள், அவர்களுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 6 மணி முதல் அந்த இளைஞர்கள் தங்கி இருந்த வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை டிஎஸ்பி தேசிய புலனாய்வு பிரிவு செந்தில்குமார் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT