தமிழ்நாடு

மாவட்டங்களில் வளா்ச்சிப் பணிகளை கண்காணிக்க தனி அதிகாரிகள் நியமனம்

7th Oct 2022 05:49 AM

ADVERTISEMENT

 தமிழகத்தின் 37 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் மாதத்தில் 4 நாள்கள் நேரில் சென்று கள ஆய்வு நடத்த வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளா் த.உதயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:

தமிழக அரசின் கொள்கை சாா்ந்த அறிவிப்புகளின் செயலாக்க நிலையை தரவுகளின் அடிப்படையில் கண்காணிக்கும் அமைப்பாக சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை விளங்குகிறது. இதற்கென துறைகளிடமிருந்து தகவல்களைப் பெற்று அவற்றின் அடிப்படையில், முக்கியமான ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் அறிக்கைகளை சமா்ப்பிக்கிறது. மேலும், பகுத்தாய்ந்து அது குறித்த அறிக்கைகளை உயா் நிலை ஆய்வுக் கூட்டங்களிலும் தயாரித்து அளிக்கிறது. இதுபோன்ற கண்காணிப்பு அமைப்பை மாவட்ட அளவு வரை கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

பணிகள் என்ன?: கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவா்கள், மாதத்தில் நான்கு நாள்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்வா். அரசின் அனைத்துத் திட்டங்கள், பணிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஆய்வுப் பணியை மேற்கொள்வா்.

ADVERTISEMENT

திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏதேனும் இடையூறுகள், முறைகேடுகள், பிரச்னைகள் இருந்தால் அவற்றை களைவதற்கான நடவடிக்கை எடுக்க வசதியாக அதுகுறித்து அறிக்கை தர வேண்டும். எந்தவித சாா்புமின்றி ஆய்வுப் பணிகளை செய்ய வேண்டும். கள ஆய்வுப் பணிகளை முடித்தவுடனேயே ஆய்வறிக்கைகளை அரசுக்கு அனுப்பிட வேண்டும். மேலும், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை நடத்தும் கூட்டங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.மாவட்டம் மற்றும் வட்ட அளவில் கண்காணிப்பு அதிகாரிக்கு தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் அளித்திட அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT