தமிழ்நாடு

கைவிடப்படும் குண்டர் சட்டம்: கை கொடுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம்

கே.வாசுதேவன்

தமிழகத்தில் குண்டர் தடுப்புச் சட்டம் சுமையாக மாறி வருவதால் காவல் துறையினர் அதை பயன்படுத்துவதை குறைத்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை அதிகமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
 தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 11,233 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 107, 109, 110 ஆகியவற்றின் கீழ் 1,27,924 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இதில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 110-கீழ் மட்டும் 76,578 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 சில ஆண்டுகளாக ரௌடிகள், கொடுங் குற்றவாளிகள், தொடர் குற்றவாளிகள் ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதைவிட, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.
 சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரௌடிகள் உள்பட சமூக விரோதிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மட்டும் கைது செய்யப்பட்டு, ஓராண்டு பிணையின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், குண்டர் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள இடர்ப்பாடுகளாலும், அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் அறிவுரைக் கழகம், உயர்நீதிமன்றம் மூலம் அதிகளவில் விடுதலை செய்யப்படுவதாலும் அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் காவல் துறையினருக்கு ஆர்வம் குறைந்துவிட்டது.
 குண்டர் தடுப்புச் சட்டம்: 1923-இல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், மேற்கு வங்கத்தில் குற்றம் செய்வதையே வழக்கமாகக் கொண்டவர்களுக்கு, நீதிமன்றத்தில் அவர்களுடைய தரப்பை எடுத்துச் சொல்லும் வாய்ப்பை அளிக்காமல், ஓராண்டு ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் சிறையில் அடைக்கும் உரிமையை காவல் துறைக்கு குண்டர் தடுப்புச் சட்டம் வழங்கியது.
 தமிழகத்தில் கடந்த 1982-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் "தமிழ்நாடு கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள் உள்ளிட்ட அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்" என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது.
 இதன் பின்னர், பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்ட இந்தச் சட்டம், 2014-ஆம் ஆண்டு, முதல் முறையாக குற்றங்களில் ஈடுபடுபவர்களையும் கைது செய்ய முடியும் என்று திருத்தப்பட்டது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
 நடைமுறைச் சிக்கல்: குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு காவலர் குறைந்தது 10 நாள்கள் உழைப்பைக் கொடுக்க வேண்டும். சிறு எழுத்துப் பிழைகள்கூட இல்லாமல் சுமார் 200 பக்கங்களில் இருந்து 500 பக்கங்கள் வரையிலான ஆவணத்தைத் தயார் செய்ய வேண்டும். அதற்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை செலவிட வேண்டும். ஆய்வாளர், உதவி ஆணையர் அல்லது துணைக் கண்காணிப்பாளர், மாவட்ட நிர்வாக நீதிபதி அதிகாரமுள்ள மாவட்ட ஆட்சியர் அல்லது மாநகரக் காவல் ஆணையர் ஆகியோரிடம் கையொப்பம் பெற வேண்டும்.
 இப்படி பல கட்டங்களைத் தாண்டி ஒரு குற்றவாளியைக் கைது செய்யும்போது, அவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிவுரைக் கழகத்தையோ அல்லது உயர்நீதிமன்றத்தையோ நாடுவார். இதில் பலரை நீதிமன்றம் விடுவிக்கிறது.
 ஜாமீன் பத்திரம்: குண்டர் சட்டத்தில் ஒருவரை கைது செய்வதற்கு இத்தகைய சவால்கள் இருக்கும் நிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 107, 109, 110 ஆகியவற்றின் கீழ் ஒருவரிடம் குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என்று ஜாமீன் பத்திரத்தில் எளிதாக நிர்வாக நடுவராக இருக்கும் காவல் துணை ஆணையர்கள், கோட்டாட்சியர்கள் முன்னிலையில் போலீஸார் கையொப்பம் பெறுகின்றனர்.
 இந்த உத்தரவாதத்தை மீறும்போது, சம்பந்தப்பட்ட நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இதில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாது. அதேநேரத்தில் ஜாமீன் பத்திரத்தில் கையொப்பமிட்டு வெளியே எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் இருந்த நாள்கள் கழிக்கப்பட்டு, மீதி நாள்களே சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
 இந்தச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஒருவரை ஓராண்டு வரைதான் சிறையில் வைக்க முடியும். அதேவேளையில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி சாதாரண நபரிடம் கையொப்பம் பெற முடியாது.
 மீறினால் கைது: குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 107-இன்படி ஒருவர், பொது அமைதிக்கு ஊறுவிளைவிப்பவர் என்று கருதும் சூழலில், அவர் அவ்வாறு செய்யாதிருக்க உரிய ஜாமீனையோ அல்லது உத்தரவாதத்தையோ கோரும் அதிகாரம் நிர்வாக நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 109-இன்படி ஒரு நபர் எதிர்காலத்தில் ஒரு பெரும் குற்றத்தை புரிவார் ("காக்னிûஸபிள் அஃபன்ஸ்') என்று நிர்வாக நடுவர் கருதும்போது, ஓராண்டுக்கு அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன் என ஜாமீன் பத்திரம் எழுதி வாங்கப்படுகிறது.

 பிரிவு 110-இன்படி தொடர் குற்றம் புரிபவர்கள், திருடுபவர்கள், திருட்டுப் பொருள்களை வாங்கி விற்பவர்கள், பெண்களுக்கு எதிரான குற்றம் புரிபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், உணவுக் கலப்படம் செய்பவர்கள், அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபடுபவர்கள் ஆகியோரிடம் நிர்வாக நடுவர் மூலம் ஜாமீன் பத்திரம் பெறப்படுகிறது. ஆனால், 110 பிரிவின் படி ஒருவரிடம் மூன்று ஆண்டுகளுக்கு ஜாமீன் பத்திரம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைக் கண்காணிக்கும் போலீஸார், அவர்கள் ஜாமீன் பத்திரத்தில் கூறப்பட்டிருக்கும் உத்தரவாதத்தை மீறும்போது கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
 தொடர் குற்றவாளிகள், ரௌடிகள், சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை தனது அணுகுமுறையை மாற்றியிருக்கும் நிலையில், இது எத்தகைய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பது இன்னும் சில காலம் கழித்துத்தான் தெரியும் என தமிழக காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 அமைதியே பொதுமக்களின் விருப்பம்


 இதுதொடர்பாக தமிழக காவல் துறையின் ஓய்வு பெற்ற ஐஜி பெ.கண்ணப்பன் கூறியதாவது:
 சமூகத்தில் அமைதி நிலவுவதற்காக, பொது அமைதியைப் பாதிக்கக் கூடிய, குற்றங்கள் புரியக்கூடிய நபர்கள் எனச் சந்தேகப்படுபவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 107,109,110-இன்படி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, சந்தேகப்படும் நபர்களை நிர்வாக நடுவரிடமோ, காவல் துணை ஆணையரிடமோ ஆஜர்படுத்துவார்கள்.
 சந்தேக நபர்களிடம் நிர்வாக நடுவர் விசாரணை மேற்கொண்டு, குற்றத்தில் ஈடுபட மாட்டேன் என வாக்குறுதி பெற்று ஜாமீன் பத்திரம் பெறுவார்கள். அதை மீறினால், சம்பந்தப்பட்ட நபர்களை சிறையில் அடைக்க இந்தச் சட்டத்தில் இடமுண்டு. காலப்போக்கில், இந்தச் சட்டப் பிரிவுகள் எதிர்பார்த்த பலனளிக்கவில்லை.
 எனவே, கொடுங்குற்றவாளிகளின் செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் குண்டர் தடுப்புச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தன. ஆனால், குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்வதற்கு அதிக செலவு ஏற்படுவது காவல் துறைக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. அதுமட்டுமன்றி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை சென்ற பலர், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சிறையில் இருந்து வெளியே வந்துவிடுகின்றனர்.
 இந்தச் சூழலில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 107, 109, 110 போன்றவற்றை அதிக அளவில் தற்போது காவல் துறையினர் பயன்படுத்துகின்றனர். எந்தச் சட்டத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதைக் காட்டிலும், சமுதாயத்தில் அமைதியான சூழ்நிலையையே காவல் துறையினர் ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக இருக்கிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு திகாா் சிறையில் எந்தவித விபத்தும் நேரிடலாம்

மக்களவைத் தோ்தல்: தருமபுரியில் 73.51 சதவீத வாக்குப்பதிவு

பெண்களின் ஆதரவு பாமகவிற்கு அமோகமாக உள்ளது: சௌமியா அன்புமணி

தருமபுரி மக்களவைத் தோ்தலில் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT