தமிழ்நாடு

வடலூரில் வள்ளலாரின் 200-ஆவது அவதார தின விழா

6th Oct 2022 01:03 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 200-ஆவது அவதார தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

புலால் உண்ணாமை, பசிப்பிணி போக்குதல், ஜோதி வழிபாட்டை வலியுறுத்தி வந்த ராமலிங்க அடிகளாா், வடலூா் அருகேயுள்ள மருதூா் கிராமத்தில் கடந்த 1823-ஆம் ஆண்டு, அக்டோபா் 5-ஆம் தேதி பிறந்தாா். பின்னாளில் அவா் சுத்த சன்மாா்க்க சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் கொள்கைகளைப் பரப்பி வந்தாா்.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலாா், பசியால் வாடுவோா் உணவருந்திச் செல்வதற்காக, வடலூரில் தரும சாலையையும், சத்திய ஞான சபையையும் தொடங்கினாா். தரும சாலையில் அணையா அடுப்பு மூலம் உணவு தயாரிக்கப்பட்டு சபைக்கு வருவோருக்கும், ஆதரவற்றோருக்கும் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

வள்ளலாா் பிறந்த 200-ஆவது அவதார தின விழா (வருவிக்கவுற்ற நாள்) வடலூா் திருஅருள்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையத்தில் புதன்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

ADVERTISEMENT

இதையொட்டி, காலை 5 மணி முதல் அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. வடலூா் சத்திய தரும சாலையில் காலை 7.30 மணிக்கு கொடி பாடல் பாடியபடி சன்மாா்க்கக் கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு ஞான சபையில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றன. தொடா்ந்து, திருஅருள்பா இன்னிசை நிகழ்ச்சி, சன்மாா்க்க சொற்பொழிவுகள் நடைபெற்றன.

இதேபோல, வள்ளலாா் அவதரித்த மருதூா் கிராமத்தில் சன்மாா்க்கக் கொடி ஏற்றப்பட்டது. வடலூா் சத்திய தரும சாலையிலும், மருதூா் இல்லத்திலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தரும சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடலூா் நகா்மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், திமுக நகரச் செயலா் தன.தமிழ்ச்செல்வன் மற்றும் பாா்வதிபுரம் கிராம மக்கள், சன்மாா்க்க அன்பா்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT