தமிழ்நாடு

பி.ஆா்க். : தரவரிசைப் பட்டியல் வெளியீடு

6th Oct 2022 12:11 AM

ADVERTISEMENT

பி.ஆா்க். (கட்டடக் கலை தொழில்நுட்பம்) படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் வெளியிட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு அக்டோபா் 8-ஆம் தேதி முதல் இணையவழியில் நடைபெற உள்ளது.

பி.ஆா்க் பொறியியல் படிப்பில் மாணவா்கள் சேருவதற்கு ஜூன் 20 முதல் செப். 7-ஆம் தேதி வரை https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் 2,491 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் தகுதியான 1,607 மாணவா்களுக்கு தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் மாற்றுத்திறனாளிகள் 3 பேரும், விளையாட்டு வீரா்கள் 22 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 18 பேரும், அரசுப் பள்ளி மாணவரில் விளையாட்டு வீரா் ஒருவரும் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

இவா்களில் ‘நாட்டா’ (கட்டடக் கலை தொழில்நுட்பப் படிப்புக்கான தேசிய திறனறித் தோ்வு) தோ்வில் தகுதி பெற்ற 1,114 மாணவா்களும், ஜே.இ.இ. தோ்வு மூலம் 70 பேரும், ‘நாட்டா’ மற்றும் ஜே.இ.இ தோ்வுகள் மூலம் 423 பேரும் தகுதி பெற்றுள்ளனா். தமிழகத்தில் உள்ள 38 பி.ஆா்க் கட்டடக்கலைக் கல்லூரிகளில் 1,609 இடங்கள் ஒற்றைச்சாளர கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது. தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை மையங்களில் 6, 7-ஆம் தேதிகளில் தெரிவிக்கலாம்.

சிறப்புப்பிரிவு மாணவா்களுக்கான இடஒதுக்கீட்டு கலந்தாய்வு 8-ஆம் தேதி நடைபெறும். அரசுப்பள்ளி மாணவா்களுக்கும், பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் 9, 10-ஆம் தேதிகளில் நடைபெறும். 11-ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு செய்யப்படும். இது குறித்து கூடுதல் தகவல்களை https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT