தமிழ்நாடு

திமுகவினரிடையே கலவரமாக மாறிய கல்வெட்டு பிரச்னை

6th Oct 2022 11:19 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடத்தில் கல்வெட்டு வைப்பது தொடர்பான பிரச்னையில் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் வீடு புகுந்து தாக்கியதில் திமுக  உறுப்பினர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 6 பேர் பலத்த வெட்டு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சம்பவம்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மசமுத்திரம் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் புல்லட் தீனா என்கின்ற தேவேந்திரன்.

இந்த ஊராட்சியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சுமார் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

இதனை சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திறந்து வைக்க இருந்ததால் அங்கன்வாடி மையத்தில் பெயர் பலகை  கல்வெட்டு அமைக்கும்படி எட்டாவது வார்டு உறுப்பினர் பிரியாவின் கணவர் அம்சநாதன் தலைவரிடம் தெரிவித்துள்ளார் .

ADVERTISEMENT

அதன்படி, அங்கன்வாடி மையத்தில் கல்வெட்டு வைக்கப்பட்டு சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரால் திறக்கப்பட்டது.

இதன்பின் மூன்று நாள்களுக்குப் பிறகு அம்சநாதன் இரு சக்கர வாகனத்தில் வரும்போது தேவேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் வழிமடக்கி  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் வாக்குவாதமாக முற்றி அனைவரும்  அம்சநாதனை தாக்கியதில்  அம்சநாதன்,  காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பாக தேவேந்திரனின் உறவினர்கள் அனைவரும் கடந்த இரண்டு நாள்களாக தங்கி இருந்து,  அம்சநாதன் வீடு திரும்பியது தெரிந்து மீண்டும் தாக்க வீட்டுக்குள் புகுந்த நிலையில்,  குடும்பத்தினர் அனைவரையும் கொலை வெறிகொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் அம்சநாதன் அவரது மனைவி பிரியா(37), மகன் ஹரிவரசு(25), ஹரிவரசின் மனைவி ஆர்த்தி (22),  அம்சநாதனின் அக்கா தேன்மொழி(48), அம்சநாதனின் தம்பி மகன் புகழ்நிதி(11) ஆகியோர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன்

இச்சம்பவம் தொடர்பாக பாலு செட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் உள்ளிட்ட உறவினர்களை விசாரணைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.

சாதாரண கல்வெட்டு விஷயம் கலவரமாகி கத்திகுத்து மற்றும் மண்டை உடைப்பு என  பலத்த  காயங்களுடன் முடிவடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊராட்சி மன்ற தலைவருக்கு சார்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாலு செட்டி காவல் நிலையத்திற்கு சென்று முற்றுகை செய்ய இருந்த நிலையில் இதுகுறித்து காவல் ஆய்வாளர் இவர்களை எச்சரித்ததால் அனைவரும் கலைந்து சென்று குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT