தமிழ்நாடு

சேலம் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் தனியார் மயமாகிறதா? சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு..!

6th Oct 2022 03:03 PM

ADVERTISEMENT


சேலம் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ள தனியார் குடிநீர் திட்டங்களுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

சேலம் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நங்கவள்ளி மற்றும் மேட்டூர் தொட்டில் பட்டி, தனியார் குடிநீர் திட்டம் ஆகிய இரண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 200 எம்எல்டி கொள்ளளவு குடிநீர் கொண்டு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது 

இந்த குடிநீர் திட்டத்தை அனைத்து மாநகர பொதுமக்களுக்கும் வழங்கும் பொருட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு திட்டத்தை முறைப்படுத்தி செயல்படுத்திட ரூ.693.49 கோடி தேவை என உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இந்த தொகையினை அனுமதிக்க முறையாக சேலம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியை பொருத்த வரையில் தற்போது 10 லட்சம் மக்கள் உள்ளனர். இந்த மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க சூரமங்கலம் அஸ்தம்பட்டி அம்மாபேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி ஆகிய பகுதிகளில் ராட்சத குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு தனி குடிநீர் திட்டத்தின் கீழ் பெறப்படும் குடிநீர் இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது 

ADVERTISEMENT

இந்த நிலையில் இந்த குடிநீர் திட்டத்தை தான் சீர்படுத்தி தற்போது 2.0 என்ற அடிப்படையில் ரூ.693 49 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் தனி குடிநீர் திட்டத்தால் சூரமங்கலம் அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டலத்திற்க்கு உள்பட்ட பகுதிகளில் தற்போது சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மற்ற இரண்டு மாநகராட்சி மண்டலங்களிலும் குடிநீர் வார கணக்கில் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதையும் படிக்க | அரசின் சிறப்புத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா?

இந்த குற்றச்சாட்டுக்கும் கடந்த மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் குடிநீர் விநியோகம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி மண்டல குழு தலைவர் குற்றம் சாட்டினார். 

இதனை களைவதற்கு தற்போது குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகத்தில் இப்படியான குளறுபடிகள் இருக்கையில் ரூ.693 கோடி மதிப்பீட்டில் தனி குடிநீர் திட்டத்தை முறைப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதுவும் மத்திய அரசின் நிதியாக 32 சதவீதமும், மாநில அரசு நிதியாக 10 சதவீதமும், மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்பாக 60 சதவீதம் என 100 சதவீத நிதியை திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், தனியார் பங்களிப்பு மட்டும் ரூ.416 கோடி ஆகும். இந்த திட்டத்தை செயல்படுத்த ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்த புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த புள்ளிக்கு மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறுவதற்காக வைக்கப்பட்டபோது எதிர்க்கட்சியான அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் தனியார் நிறுவனம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்தால் குடிநீர் விநியோகம் தனியார் வாசம் ஆகும் என்றும், இதனால் பல்வேறு குளறுபடிகளுக்கு வழிவகுக்கும் என எதிர்ப்பு தெரிவித்தனர்

மேலும், இது குறித்து அதிகாரிகளும் மன்ற கூட்டத்தில் விளக்கமாக பதில் அளிக்காமல் மழுப்பலான பதில் அளித்ததால் இந்த தீர்மானம் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் மாநகராட்சியில் படிப்படியாக தனியார் வசமாக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. தூய்மைப் பணியாளர்கள் தனியார் வசம், மாநகராட்சி பகுதிகளில் மின்விளக்கு பராமரிப்பு தனியார் வசம், குப்பை வண்டிகளை பராமரிப்பது தனியார் வசம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தனியாருக்கு தாரை வார்த்துவரும் நிலையில், தற்போது பொதுமக்களின் அத்தியாவசிய வாழ்வாதாரமான குடிநீரை பராமரிக்க தனியாருக்கு தாரைவார்ப்பது கண்டனத்திற்குரியது என்றும் தற்போதைய சூழ்நிலையில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் மாதம் ஒருமுறை தங்கள் பயன்படுத்தியதற்கான குடிநீர் கட்டணத்தை கட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க | ரூ.360 கோடியில் புதிய பிரதமர் இல்லம்: மத்திய அரசு முடிவு

ஆனால், இதையே தனியார் வாசம் ஆக்கினால் நுகர்வோர் பயன்படுத்தும் தண்ணீரின் அளவை பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படுவதோடு நுகர்வோர் சேமிக்கும் தண்ணீருக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், தற்போது மின்சார கட்டணம் செலுத்துவது போன்று குடிநீர் கட்டணமும் செலுத்த கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டு கட்ட தவறினால் அபராதத்துடன் கட்டணம் வசூலிக்கும் அபாய நிலையும் உண்டாகும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இவைத்தவிர ஒவ்வொரு வீடுகளுக்கும் தண்ணீர் பயன்படுத்துவதற்கான மீட்டர் வைக்கப்பட்டு தனியார் நிறுவனமே குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்து கொள்ளை லாபம் பெற தமிழக அரசு வழி வகுத்துள்ளது கண்டனத்திற்குரியது. எனவே, குடிநீர் திட்டத்தை தனியாருக்கு விடும் முடிவை சேலம் மாநகராட்சியும், தமிழக அரசும் மறுபரிசீலினை செய்ய வேண்டும் எனும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாநகராட்சியில் குடிநீர் திட்டத்திற்காக ரூ.416 கோடி முதலீடு செய்யும் தனியார் நிறுவனம் திட்டத்தை நிறைவேற்றிய பின் அந்த நிறுவனத்தின் நடவடிக்கை என்ன என்பது ரகசியமாக வைத்துள்ளதாக சேலம் மாநகராட்சி மீது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே. ஆரம்பத்திலேயே இதுபோன்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை கைவிட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

சமூக ஆர்வலர்களின் கோரிக்கைளுக்கு சேலம் மாநகராட்சி செவி சாய்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT