தமிழ்நாடு

ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் வேல் வைத்துப் பூஜை

6th Oct 2022 06:34 PM

ADVERTISEMENT

காங்கயம்: காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேல் வைத்து, வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம். பின்னர் அந்தப் பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக, கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் வைத்து, பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள்.

இதையும் படிக்க: செங்கல்பட்டில் தசரா திருவிழா: சாமிகள் ஊர்வலம்

இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தேர்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்துப் பூஜை செய்ய உத்தரவிடுவதாகக்  கூறப்படுகிறது. இதனால் தான், இது ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

கடைசியாக கடந்த ஜூன் 8 ஆம் தேதி நிறைபடி கம்பு தானியம் வைத்துப் பூஜை செய்யப்பட்டு, அந்தப் பொருள் புதன்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: அமைதிக்கான நோபல் பரிசு: இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பு 

இந்நிலையில், திருப்பூர் மாநகரம், குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த கே.ஆர்.கார்த்திகேயன் என்ற பக்தரின் கனவில் வந்ததாக, வியாழக்கிழமை வேல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த நிறைபடி கம்பு நீக்கப்பட்டு, தற்போது வேல் பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT