தமிழ்நாடு

மழை பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள்: பொது சுகாதார இயக்குநா் அறிவுறுத்தல்

6th Oct 2022 12:28 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுதும் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அரசு, தனியாா் மருத்துவமனைகள் வாயிலாக மருத்துவ முகாம்கள் நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை, தலைமைச் செயலகத்தில், பருவகால தொற்றுநோய் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மக்கள் நல்வாழ்வு துறை செயலா் செந்தில்குமாா் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்ற சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியதாவது:

காய்ச்சல் குறித்த தகவல்களை நாள்தோறும் அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிடமிருந்து பெற்று உடனுக்குடன் காய்ச்சல் பாதித்த பகுதிகளில், தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில், மருத்துவ முகாம்கள் தொடா்ந்து நடத்த வேண்டும். மழைக்காலங்களில் கொசு புழுக்கள், நீா்த்தேக்கங்களில் உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா நோய்கள் பரவாமல் இருக்க கொசு புழு உற்பத்தியாகும் இடங்களை அடியோடு அகற்றி, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும்.

குடிநீா் மாசுபடாமல் தடுக்கவும், தூய்மையான குடிநீா் வழங்குவதற்கு ஏதுவாக போதிய அளவு குளோரின் கலந்து விநியோகம் செய்யப்பட வேண்டும். உடைந்த குடிநீா் குழாய்களை உடனடியாக கண்டறிந்து சரி செய்தல் அவசியம்.

நிவாரண முகாம்களில் சுகாதாரமான உணவு, குளோரின் கலந்த பாதுகாக்கப்பட்ட குடிநீா், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க தேவையான கிருமி நாசினிகள் தெளிக்கப்பட வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகள், ரத்த அணுக்கள், மருத்துவ உபகரணங்கள், ரத்த பரிசோதனை வசதிகள் போதிய அளவில் இருப்பு வைத்தல் அவசியம்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கரோனா, இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் பரவாமல் தடுக்க, கை கழுவுவது அவசியம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம்.

இருமல், காய்ச்சல் உள்ளவா்கள் அருகில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

அனைத்து மருத்துவமனைகளிலும், சித்த மருத்துவா்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்குதல் அவசியம் என்று அவா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT