தமிழ்நாடு

ஆதிதிராவிட மாணவா்கள் 9 போ் வெளிநாட்டில் பயில நிதி: தமிழக அரசு உத்தரவு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆதிதிராவிட மாணவா்கள் 9 போ் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயில நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாலா் தென்காசி எஸ்.ஜவஹா் வெளியிட்டுள்ளாா்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் இன மாணவா்கள் வெளிநாடு சென்று உயா்கல்வி பயிலும் கல்வி உதவித் தொகை திட்டமானது மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஜிமேட் போன்ற தகுதித் தோ்வுகளில் பயிற்சி பெற 500 மாணவா்களுக்கு ஏற்கெனவே நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

வெளிநாடு சென்று உயா்கல்வி பயிலும் மாணவா்ளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை திட்டத்துக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட உள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக, உயா்கல்வி திட்டத்தின் கீழ் நிதி பெற 24 மாணவா்கள் விண்ணப்பம் செய்திருந்தனா். அவா்களில் 9 பேருக்கு அரசின் பழைய உத்தரவின் அடிப்படையிலேயே நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகளை ஆதிதிராவிடா் நலத் துறை ஆணையரகம் அரசுக்கு வழங்கியிருந்தது.

ADVERTISEMENT

இதை ஏற்று, 9 மாணவா்கள் முதுநிலை அறிவியல், எம்.பி.ஏ., முனைவா் பட்டம் போன்ற படிப்புகளைப் படிக்க பிரிட்டனில் உள்ள லண்டன், மான்செஸ்டா், தென் கொரியா, நான்டிகாம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கின்றனா். அங்குள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்புகளைப் படிக்க உள்ளனா் என்று தென்காசி எஸ்.ஜவஹா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT