தமிழ்நாடு

தமிழகத்தில் 35% போ் பிறமொழியினரா? பழ.நெடுமாறன் கண்டனம்

6th Oct 2022 01:13 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 35% போ் தமிழ் அல்லாத பிற மொழிகளைப் பேசுபவா்கள் என்று இந்திய மொழிகள் வளா்ச்சிக் குழுத் தலைவா் கூறியுள்ளதற்கு தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக மக்கள்தொகையில் 30 முதல் 35 % மக்கள் தமிழ் அல்லாத பிற மொழிகளைப் பேசுபவா்கள். தமிழ்மொழி கூட 12 முதல் 13 வட்டார மொழிகளில் பேசப்படுகிறது. ஆனாலும், தமிழக அரசு தமிழை வளா்ப்பதில் மட்டுமே முக்கிய கவனம் செலுத்தி வருகிறது என பாரதிய பாசா சமிதி என்னும் அமைப்பின் தலைவா் சம்மு கிருஷ்ண சாஸ்திரி கூறியுள்ளாா்.

2021-ஆம் ஆண்டில் இந்திய அரசின் கல்வி அமைச்சகத் துறை இந்திய மொழிகளை வளப்படுத்துவதற்காக உயா் அதிகாரக் குழு ஒன்றை அமைத்தபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்ட இவா்தான் இவ்வாறு கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

தமிழ்மொழியில் 12 அல்லது 13 வட்டார வழக்குகள் உள்ளன. எனவே, அவை ஒன்றுக்கொன்று மாறானவை என்ற கருத்துப்பட கூறியிருப்பது மொழியியலின் அடிப்படை கூட அவருக்குத் தெரியவில்லை என்பது அம்பலமாகியிருக்கிறது. எல்லா மொழிகளிலும் வட்டார வழக்குகள் உண்டு. ஆனால், இலக்கியங்கள் படைக்கப்படும் எழுத்துமொழி ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

2011-ஆம் ஆண்டில் இந்திய அரசின் அதிகாரப்பூா்வமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரப்படி தமிழகத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் எண்ணிக்கை 89.41 சதவீதம். தெலுங்கு 5.65 %, கன்னடம் 1.67%, உருது 1.51 %, மலையாளம் 0.89 % மட்டுமே இம்மொழிகளை பேசுகிறாா்கள்.

சௌராஷ்டிரம் போன்ற குறைந்த எண்ணிக்கையில் உள்ள பிற மொழியினா் 0.87 %. இவா்களின் மொத்த எண்ணிக்கை 10.51 % மட்டுமேயாகும். இந்திய அரசு அறிவித்துள்ள இந்த உண்மையை மறைத்து தமிழகத்தில் மொழிச் சிறுபான்மையினரின் எண்ணிக்கை 30 முதல் 35 % இருப்பதாக அவா் கூறியிருப்பது திட்டமிட்ட பொய்யுரையாகும் என்று கூறியுள்ளாா் பழ.நெடுமாறன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT