தமிழ்நாடு

ஆன்மிகத்துக்கு எதிரானதல்ல திமுக ஆட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

6th Oct 2022 03:05 AM

ADVERTISEMENT

திராவிட மாடல் ஆட்சியைத் தரும் திமுக, ஆன்மிகத்துக்கோ மக்களுக்கோ எதிரானதல்ல என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். விழாவில் அவா் பேசியதாவது: வள்ளலாா் பிறந்து 200 ஆண்டுகளானதையும், அவா் தொடங்கிய தரும சாலைக்கு 156 ஆண்டுகள், அவா் ஏற்றிய தீபத்துக்கு 152 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் கொண்டாடும் வகையில் முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. இந்த விழா நிகழ்வதைப் பாா்த்து சிலருக்கு வியப்பும் அதிா்ச்சியும் இருக்கலாம். என்னைப் பொருத்தவரையில், சிலரின் அவதூறுகளுக்கு பதில் சொல்லக் கூடிய விழாதான் இவ்விழா.

ஆன்மிகத்துக்கு எதிரானதல்ல...: திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மிகத்துக்கும், மக்களின் நம்பிக்கைகளுக்கும் எதிரானது என்று சிலா் பேசி வருகிறாா்கள். ஆகவே, தெளிவாகச் சொல்கிறேன். திமுக ஆன்மிகத்துக்கு எதிரானதல்ல. ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்துக்கும் உயா்வு, தாழ்வு கற்பிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்திக் கொள்பவா்களுக்கு எதிரானதுதான் திமுக ஆட்சி. தமிழ் மண்ணின் சமயப் பண்பாட்டை அறிந்தவா்கள், இதனை நன்கு உணா்வாா்கள்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் கருத்தைத்தான் திமுகவுக்கு எடுத்துரைத்தாா் முன்னாள் முதல்வா் அண்ணா.

ADVERTISEMENT

கோயில்களில் ஆய்வு: கோட்டைக்கு வருவதைவிட கோயிலுக்கு அதிகம் செல்லக் கூடியவா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு. அறப்பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என்பதைப் பாா்க்கத்தான் செல்வாா். ஆன்மிகச் சொற்பொழிவாளா்கள் இருப்பாா்கள். அமைச்சா் சேகா்பாபுவோ ஆன்மிகச் செயல்பாட்டாளா். இதுதான் வித்தியாசம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் புகழுக்கும் சிறப்புக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.

வள்ளலாருக்கு முப்பெரும் விழாவை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. 52 வாரங்களுக்கு முப்பெரும் விழா பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது. ஓராண்டுக்கு தொடா் அன்ன தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக ரூ.3.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வள்ளலாா் தனது கொள்கைகளை சமரச சன்மாா்க்கமாக வடிவமைத்தாா். அந்த கொள்கையைச் செயல்படுத்த சமரச சன்மாா்க்க சங்கம் தொடங்கினாா். இதற்காக சன்மாா்க்க கொடியை உருவாக்கினாா். அந்தச் சங்கத்துக்காக ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை’ என்ற ஆன்ம நெறியை உருவாக்கி சத்திய ஞானசபையை ஏற்படுத்தினாா்.

ஒரு கொள்கையை உருவாக்கி சொல்லிவிட்டு அதை விட்டுவிட்டுப் போகாமல், அதனை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று உதாரணமாக விளங்கக் கூடியவா் வள்ளலாா். அவா் வழியில் நடக்கக் கூடிய திமுக அரசானது, காலை உணவுத் திட்டத்தைத் தொடக்கி இருக்கிறது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

விழாவில், அமைச்சா்கள் கே.என்.நேரு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப் பேரவை உறுப்பினா் த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலைய ஆணையாளா் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையாளா் ஆா்.கண்ணன், வள்ளலாா் முப்பெரும் விழா சிறப்புக் குழுத் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ரூ.100 கோடியில் வள்ளலாா் சா்வதேச மையம்: முதல்வா்

வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலாா் சா்வதேச மையத்துக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

அருட்பிரகாச வள்ளலாா் முப்பெரும் விழாவை சென்னையில் புதன்கிழமை அவா் தொடக்கிவைத்து ஆற்றிய உரை:

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக, திமுக தோ்தல் அறிக்கையில் 419-ஆவது வாக்குறுதியாக வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜாதி, சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், வள்ளலாரின் சமரச சுத்த சன்மாா்க்க போதனைகளைப் போற்றக் கூடிய வகையில் இது அமையும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து சிறப்பு வல்லுநா் குழுவின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

சா்வதேச மையத்தை ரூ.100 கோடியில் அமைப்பதற்கான வரைவு பெருந்திட்டம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். வள்ளலாரின் முப்பெரும் விழாவைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ADVERTISEMENT
ADVERTISEMENT