தமிழ்நாடு

திமுக ஆட்சியில் பணிகள் முடங்கியுள்ளன: எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

5th Oct 2022 11:56 AM

ADVERTISEMENT

 

சேலம்: திமுக ஆட்சியில் எந்தவித திட்டங்களும் நடைபெறாமல் முடங்கிப் போய் உள்ளது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சேலம் சூரமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலை நகரில் அவரது இல்லத்தில் தங்கி உள்ளார்.  சரஸ்வதி பூஜையையொட்டி திரளான தொண்டர்கள் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் அமமுக செயலாளர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

ADVERTISEMENT

அப்போது, அவருடன் அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா மற்றும் கடையநல்லூர் அதிமுக எம்எல்ஏ  கிருஷ்ணா முரளி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கட்சியில் இணைந்தவர்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமமுகவில் இருந்து அய்யாதுரை பாண்டியன் தலைமையில் சுமார் 10 ஆயிரம் பேர் இணைய உள்ளனர். முன்னோட்டமாக அவரது தலைமையில் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு எனது இதயபூர்வ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

இதையும் படிக்க | தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.480 அதிகரித்தது!

அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எங்களது வழக்குரைஞர்கள் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கவில்லை என தெரிவித்தனர்.

இதைக் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணை முடியும் வரை பொதுக்குழு கூட்டம் நடத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். தடை ஆணை பிறப்பிக்க வில்லை. பொதுச் செயலாளர் அறிவிப்பும் நாங்கள் வெளியிடவில்லை.

திமுக ஆட்சி மெத்தனமாக நடந்து வருகிறது. நாங்கள் செய்த திட்டப் பணிகளை திறந்து வைத்து வருகின்றனர். பெரிய திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

நாங்கள் 11 அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தோம். அதை திறந்து வைத்துள்ளனர். முடிவுற்ற பணிகளைதான் திறந்து வைக்கின்றனர்.

கோவையில் 133 வேலைகளுக்கு 11 முறை ஒப்பந்தம் அறிவித்துள்ளனர். ஆனால், யாரும் ஒப்பந்தம் எடுக்க முன்வரவில்லை. அதிக கமிஷன்  கேட்பதாக, ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.

திமுக ஆட்சியில் கிராம் தொடங்கி மாநகராட்சி வரை எந்த பணிகளும் நடைபெறாமல் முடங்கியுள்ளன. 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை.

மேலும், மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 50 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டடுள்ளது. கடைகளுக்கும் வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மக்கள் நிம்மதியாக இல்லை. துன்பமும், வேதனையும் அனுபவித்து வருகின்றனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்வோம் என தெரிவித்திருந்தனர். ஆனால், இதுவரை நீட்தேர்வை ரத்து செய்யவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT