தமிழ்நாடு

ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல, திமுக: மு.க. ஸ்டாலின்

DIN


சென்னை: ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல, திமுக. ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்திற்கும் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில், ஆற்றிய உரையில், 
தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும் - அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்த நமது திராவிட மாடல் அரசு, 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற திருவருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாளை, தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்து இருக்கிறது.

வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள்
அவர் தொடங்கிய தரும சாலைக்கு 156 ஆண்டுகள்
அவர் ஏற்றிய தீபத்திற்கு 152 ஆண்டுகள் - ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக இந்த நிகழ்ச்சியை நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சி நடப்பதைப் பார்த்து சிலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஏன், அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில், சிலர் சொல்லி வரும் அவதூறுகளுக்கு பதில் சொல்லக்கூடிய விழா தான் இந்த விழா. திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மிகத்திற்கு எதிரானது, திராவிட மாடல் ஆட்சியானது மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று மதத்தை வைத்துப் பிழைக்கக்கூடிய சிலர் நாட்டிலே பேசி வருகிறார்கள்.

திராவிட மாடல் ஆட்சியானது ஆன்மிகத்திற்கு எதிரானது, மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது, இதை மட்டும் போட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் இப்படி பேசினார் என்று வெட்டி, ஒட்டி, பின்னால் பேசியதை வெட்டிவிடுவார்கள். மதத்தை வைத்து பிழைக்கக்கூடிய சிலர் நாட்டிலே பேசி வருகிறார்கள் என்பதை வெட்டிவிட்டு, முன்னால் இருப்பதைப்போட்டு, அதற்கென சில சமூக ஊடகங்கள் இருக்கின்றன. ஆக, நான் தெளிவோடு சொல்ல விரும்புவது, ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல, திமுக. ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்திற்கும் உயர்வு-தாழ்வு கற்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானது தான் இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி. தமிழ் மண்ணின் சமயப் பண்பாட்டை அறிந்தவர்கள், இதை நன்கு உணர்வார்கள்!

பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்று, பிற்போக்குக் கயமைத்தனங்களை எதிர்க்கக்கூடிய வள்ளுவரின் மண்தான், இந்த தமிழ் மண்! 'நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையிலே' என்றும் முழங்கிய சித்தர்கள் உலவிய மண், நம்முடைய தமிழ் மண்! 'இறைவன் ஒருவன்தான், அவன் ஜோதி வடிவானவன்' என்று எடுத்துச் சொல்லிய வள்ளலாரின் மண், இந்த தமிழ் மண்! 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற திருமூலரின் கருத்தைத்தான், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு எடுத்துரைத்தவர் நம்முடைய தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள்!

அந்த அடிப்படையில்தான், வள்ளலாரின் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக நாம் அறிவித்திருக்கிறோம்!

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 419-ஆவது வாக்குறுதியாக 'வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம்' அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம். ''சாதி சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், திருவருட்பிரகாச வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கப் போதனைகளைப் போற்றக்கூடிய வகையில் இது அமையும்'' என்று அந்த வாக்குறுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனை எப்படி அமைப்பது என்பது குறித்து ஒரு சிறப்பான வல்லுநர் குழு ஆலோசனை பெறப்பட்டுள்ளது. பலமுறை நம்முடைய அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் இதனை அமைப்பதற்கான பெருந்திட்ட வரைவுத் திட்டம் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். அந்த வரிசையில்தான், நாம் இன்று இந்த முப்பெரும் விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவினருடன் நானும் பல ஆலோசனைகளை செய்திருக்கிறேன். விழா ஏற்பாடுகளெல்லாம் சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. 52 வாரங்களுக்கு முப்பெரும் விழா பல்வேறு நகரங்களில் நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புவது, ஓராண்டிற்கு தொடர் அன்னதானம், பேச்சாளர்களுக்கு சன்மானம் உள்ளிட்ட இந்த விழாவிற்கு 3 கோடியே 25 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

 நூலாசிரியர்
 உரையாசிரியர்
 பதிப்பாசிரியர்
 பத்திரிக்கையாசிரியர்
 போதகாசிரியர்
 ஞானாசிரியர்
 வியாக்கியான கர்த்தர்
 சித்தமருத்துவர்
 சீர்திருத்தவாதி
 கவிஞர்
 ஞானி
- இப்படி எல்லாமுமாக இருந்தவர் வள்ளலார் அவர்கள். தனது கொள்கையைச் சமரச சன்மார்க்கமாக வடிவமைத்தார். அந்த கொள்கையைச் செயல்படுத்த சமரச சன்மார்க்க சங்கம் தொடங்கினார். அந்த சங்கத்துக்காக சன்மார்க்க கொடி உருவாக்கினார். அந்தச் சங்கத்துக்காக 'அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை' என்ற ஆன்ம நெறியை உருவாக்கினார். அதற்காக சத்திய ஞானசபையை உருவாக்கினார்.
ஒரு கொள்கையை உருவாக்கிச் சொல்லிவிட்டு, அதை விட்டுவிட்டு போகாமல், அதனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று எடுத்துக்காட்டாக விளங்கக்கூடியவர் நம்முடைய வள்ளலார் அவர்கள். கருணையைக் கடவுள் என்றவர் அவர். அதனால் பசிப்பிணியைப் போக்குவதே இறைப்பணி என நினைத்தார். அணையாத அடுப்பை மூட்டினார்! பசிப்பிணி தடுத்தார்! அவர் வழியில் நடக்கக்கூடிய இந்த அரசானது, காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. பசியுடன் பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு உணவளிக்கும் திட்டமானது மணிமேகலையில் அமுதசுரபியின் தொடர்ச்சியாக, வள்ளலார் மூட்டிய அணையா அடுப்பின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டிருக்கிறது என்று கூறினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT