தமிழ்நாடு

இவங்களையெல்லாம் கன்னியாகுமரிக்கு பணியிடை மாறுதல் செய்யுங்க... தெறிக்கவிட்ட துரைமுருகன்!

5th Oct 2022 11:45 AM

ADVERTISEMENT

 

அமைச்சர் துரைமுருகனின் சொந்த தொகுதியான காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொறுப்புடன் பணியாற்றாத மருத்துவத் துறையினரை பணியிடை நீக்கம் செய்யுங்கள் அல்லது பணியிடை மாறுதல் மாறுதலுக்கு பரிந்துரைக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் முறையிட்டார் துறைமுருகன்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் சொந்த தொகுதியான காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொன்னையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் துரைமுருகன் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, பொன்னை கிராம மக்கள் ''பொன்னை அரசு மருத்துவமனை முறையாக செயல்படவில்லை என்றும், பாம்பு கடிக்கு மருந்து இல்லை என்றும் அடிக்கடி மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் இருப்பதில்லை, இருப்பவர்களும் கடமைக்குக்கென்று செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாம் | ராணிப்பேட்டை பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

இதையடுத்து அதிரடி ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் இருவரும் மருத்துவர்களையும், மருத்துவ அதிகாரிகளையும்  கடிந்து கொண்டனர்.

இதில், அமைச்சர் துரைமுருகன் ஒரு படி மேலே சென்று " சுகாதார பணிகள் இயக்குநரை பார்த்து ஆமா நீ யாரு... உங்களை நான் பார்த்ததே இல்லையே... இப்போதுதான் பார்க்கிறேன் என்று கேள்வி கேட்க, நான்தான் சுகாதாரப் பணிகள் இயக்குநர் என்று அவர் பதிலளிக்க, உங்களையெல்லாம் நான் பார்த்ததே இல்லையே இவ்வளவு நாளா நீங்க எல்லாம் எங்க இருந்தீங்க என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், பணியில் கவனம் செலுத்தாத வட்டார மருத்துவ அலுவலர், மற்றும் மருத்துவர்களை கடிந்து கொண்ட துரைமுருகன், நீங்க எல்லாம் எந்த ஊரு, முதல்ல இவங்கள பணியிடை நீக்கம் செய்யுங்க அப்படி இல்லன்னா கன்னியாகுமரிக்கு பணி மாறுதல் செய்யுங்க என்று ஆவேசமாக அமைச்சர் சுப்ரமணியிடம் முறையிட்டார் துறைமுருகன்.

அதன் பின்னர் பணி மாறுதல் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரை செய்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT