தமிழ்நாடு

ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

DIN

பென்னாகரம்: காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால்  சேதமடைந்த ஒகேனக்கல் அருவிகள் சீரமைப்பு முடிவுற்றதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவ மழையினால், கபினை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு உபரிநீர் அதிகரித்து வந்தது. காவிரி ஆற்றில் அதிகபட்சமாக 2.45 லட்சம் கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகள் அனைத்தும் மூழ்கி சேதமடைந்தது.

தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்ததால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம், ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும் பொதுமக்கள் காவிரி ஆற்றினை கடந்து செல்வதற்கும் தடை விதித்திருந்தது. பின்னர் இரு மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தென்மேற்கு பருவமழையின் அளவு தொடர்ந்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு முற்றிலுமாக குறைக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வந்தது. காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்தபிரதான அருவி, பெண்கள் குளிக்கும் அருவி, நடைபாதை தடுப்புக் கம்பிகள் சீரமைப்பு பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த சீரமைப்பு பணி முற்றிலுமாக முடிவுற்றது. மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து நொடிக்கு 16 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதாலும் அருவிகள் சீரமைப்பு முடிவுற்றதாலும் 86 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அனுமதி அளித்துள்ளார்.

ஆயுத பூஜையை முன்னிட்டு ஒகேனக்கல் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் குளிக்க அனுமதி அளித்துள்ளதை அடுத்து எண்ணெய் தேய்த்து பிரதான அருவியில் குளித்து மகிழ்ந்தனர். சீரமைப்பு பணிக்குப் பிறகு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பிரதான அருவி மற்றும் பெண்கள் குளிக்கும் அருவிகளில் சற்று கூட்ட நெரிசலாக காணப்பட்டது.

மேலும் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக சின்னாறு பரிசல் துறையில் இருந்து பிரதான அருவி, கூட்டாறு, கோத்திகல், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்தினருடன் உற்சாகப் பரிசல் பயணம் மேற்கொண்டனர். தொடர் விடுமுறையால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT