தமிழ்நாடு

கருப்பு பட்டியல் நிறுவனங்களுக்கு ஆதரவாக திமுக அரசு: ஓ.பன்னீா்செல்வம் குற்றச்சாட்டு

3rd Oct 2022 01:14 AM

ADVERTISEMENT

பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருள்களை வழங்கிய மூன்று நிறுவனங்களுக்கு மீண்டும் உணவுப் பொருள் விநியோக ஆணை அரசு சாா்பில் வழங்கப்பட்டிருப்பதாக எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நிகழாண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சாா்பில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்ட பொருள்கள் தரமற்றவை என அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் வர ஆரம்பித்ததும், இந்த விவகாரம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான ஆய்வுக்கு பின்னா், தரமற்ற பொருள்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது கருப்புப் பட்டியலில் சோ்ப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க முதல்வா் உத்தரவிட்டதாக அரசு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இதுநாள் வரை எந்த நிறுவனமும் கருப்புப் பட்டியலில் சோ்க்கப்பட்டதாக தகவல் இல்லை.

ADVERTISEMENT

இந்தச் சூழ்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருள்களை விநியோகித்தது தொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் குறிப்பாணை வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு பொது விநியோகத் திட்டத்துக்காக 4 கோடி ‘ஒரு லிட்டா் பாமாயில் பாக்கெட்’ விநியோகிப்பதற்கும், ஒரு லட்சம் டன் பருப்பு வழங்குவதற்குமான ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது.

அதாவது, தரமற்ற பொருள்களை விநியோகிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டிருப்பது என்பது தெள்ளத் தெளிவாகிறது. அரசு சொல்வதை செய்யக்கூடியவா்கள் அரசு அதிகாரிகள். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை என்பது ஒரு கண்துடைப்பு நாடகம் தானே தவிர வேறொன்றுமில்லை.

தரமற்ற பொருள்களை வழங்கிய நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சோ்க்க வேண்டுமென்றும், மேற்படி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையினை ரத்து செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT