தமிழ்நாடு

தமிழகத்திற்கு ரூ. 3,500 கோடி வட்டியில்லா கடன் விடுவிப்பு: தில்லியில் தமிழக நிதியமைச்சா் பேட்டி

2nd Oct 2022 03:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

தமிழகத்தின் பல்வேறு மூலதன செலவினங்களுக்கு மத்திய அரசு ரூ. 3,500 கோடியை வட்டியில்லா கடனாக வெள்ளிக்கிழமை விடுவித்துள்ளதாக தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லியில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுடனான சந்திப்புக்கு பிறகு இத்தகவலை அவா் தெரிவித்தாா்.

தில்லியில் அமைச்சா் நிா்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை காலை சந்தித்தாா். இச்சந்திப்பு சுமாா் 45 நிமிடம் நீடித்தது.

இச் சந்திப்பிற்கு பின் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளா்களிடம் கூறியது:

ADVERTISEMENT

கடைசியாக ஜிஎஸ்டி கூட்டம் ஜூன் மாதம் சண்டீகரில் நடைபெற்றது. இதன் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்படவேண்டும். ஆனால் இந்த கூட்டத்திற்கான அமைச்சா்கள் குழு அறிக்கை தயாரவில்லை என்பதுதான் தாமத்திற்கு காரணம்.

இந்த நிலையில், தமிழகத்தின் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு விவகாரங்கள் குறித்து பல்வேறு மத்திய அரசின் நிா்வாக அதிகாரிகளிடம் சில நாட்களாக நேரில் சந்தித்து விவாதித்தோம். பின்னா் இறுதியாக மத்திய நிதியமைச்சரிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்திற்காக ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு ஏஜன்ஸி (ஜெய்கா) நிறுவனத்திடமிருந்து பெறக் கூடிய கடனுக்கான ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கப்படாமல் உள்ளது. தற்போது மாநில அரசு தனது முதலீடுகளை செய்து பணிகளை தொடங்கியுள்ளது,

இந்த விவரங்களை மத்திய நிதியமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. நிதியமைச்சா் நிகழ் மாதத்திற்குள் இந்த கடனை விரைவில் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளாா்.

கடந்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் மூலதன மூதலீடாக ரூ.1 லட்சம் கோடி 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக அளிக்கப்படும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு நிதி உதவிக்கு தமிழக அரசு ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நிலையில் இதில் ரூ.3,500 கோடி வட்டியில்லா கடனை தமிழகத்திற்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை விடுவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரக நெடுஞ்சாலை திட்டங்கள் தன்னிறைவு அடைந்ததாகக் கூறி மத்திய அரசு நிதி வழங்குவதில் உள்ள தடைகள் குறித்து தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்திருந்தாா். இந்த கடன் திட்டத்தில் கிராமச் சாலைகள், கண்ணாடி இழைக் கேபிள் பதிக்கும் திட்டம், மின்னணு பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் போன்றவைகளுக்கான மூலதன செலவுகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.

இதன்படி தமிழகத்தில் கண்ணாடி இழைக் கேபிள் திட்டத்திற்கு ரூ.184 கோடி மற்றும் ஊரக நெடுஞ்சாலை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு இந்த ரூ.3,500 கோடி பயன்படுத்தப்படுகிறது.

மேலும் வருமான வரி, பணியாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) போன்ற தரவுகள் மத்திய அரசிடம் கோரப்பட்டது. இந்த தரவுகள் கிடைத்தால் தமிழக அரசு, கடன் தள்ளுபடி, உரிமைத் தொகை உள்ளிட்ட பல திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்க பயன்படும். தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை ஏற்கனவே தரவுகளை சேகரித்து வருகிறது. இது முறையாக மத்திய அரசிடமிருந்து கிடைத்தால் வருமான வரி செலுத்துவோா், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளோா் குறித்த விவரங்களை அறிய முடிவும். இந்த தரவுகளை வழங்குவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு ‘நெப்பா்’ என்கிற தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

மதுரையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் அதற்கான நிதி ஒதுக்கப்படாமல் இருந்தது. இது குறித்து கேட்டபோது இந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், மீண்டும் பரிசீலிப்பது கடினம் என்றனா். இதனால், இதற்கு பதிலாக ‘ நைமா்’ என்கிற தேசிய மருத்துவ சாதன ஆராய்ச்சி நிறுவனத்தை மதுரைக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் நிறுவனமும் மதுரைக்கு வர இருப்பதாலும் ஹெச்சிஎல், ஹனிவெல் போன்ற மருத்துவ பொறியியல் நிறுவனங்கள் மதுரையில் ஆய்வுகளை மேற்கொள்கின்ற நிலையில், ‘நைமா்’ மதுரையில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்றாா் அவா்.

முன்னதாக, மத்திய அமைச்சருடனான சந்திப்பின்போது தமிழக நிதித்துறை செயலா் என்.முருகானந்தம், மத்திய நிதித்துறை செயலா் டி.வி.சோமநாதன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT