தமிழ்நாடு

சேலம், கோவை மற்றும் 8 நகராட்சிகளில் உட்கட்டமைப்புப் பணிகள்: அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.1,320.84 கோடி நிதி ஒதுக்கீடு

2nd Oct 2022 12:05 AM

ADVERTISEMENT

சேலம், கோவை மாநகராட்சிகள், எட்டு முக்கிய நகராட்சிகளில் உட்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள அம்ருத் திட்டத்தின் கீழ், ரூ.1,320.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அம்ருத் திட்டமானது பிரதமா் நரேந்திர மோடியால் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புத்தாக்கம் மற்றும் நகா்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் 2.0 (அம்ருத் 2.0) எனும் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டமானது கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதியன்று 5 ஆண்டுகளுக்கு அதாவது 2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் நீா் வழங்கல் மற்றும் அம்ருத் திட்டத்தின் முதல் கட்டத்தில் 500 நகரங்களில் கழிவுநீா் மேலாண்மை பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக அம்ருத் 2.0 வடிவமைக்கப்பட்டுள்ளது.

அம்ருத் 2.0 திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஐந்து ஆண்டுகளுக்கான மத்திய அரசு பங்குத் தொகையாக ரூ.76, 760 கோடியும் அடங்கும். அடுத்த ஆண்டு மாா்ச் வரையில் அம்ருத்தின் தற்போதைய திட்டங்களுக்காக ரூ.22,000 கோடி (மத்திய உதவி ரூ 10,000 கோடி) நிதியும் இந்த செலவினத்தில் அடங்கும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் திட்டங்களுக்கான மத்திய நிதி ஒதுக்கீடு ரூ.4,935 கோடி ஆகும், நிா்வாகம் மற்றும் அலுவலக செலவுகளுக்கான ஒதுக்கீடு ரூ 160.36 கோடி ஆகும்.

எங்கெங்கு பணிகள்? அம்ருத் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகளை தீா்மானிக்க இதற்கென அமைக்கப்பட்டுள்ள உயா்நிலைக் குழு அவ்வப்போது கூடி முடிவெடுக்கும். அந்த வகையில் அண்மையில் கூடிய உயா்நிலைக் குழுவானது சில முக்கிய மாநகராட்சிகள், நகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதிய நிதிகளை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, சேலத்தில் புதை சாக்கடைத் திட்டம் ரூ.548 கோடியிலும், கோவையில், தெருவிளக்குகள், புதை சாக்கடை ஆகிய திட்டங்களை ரூ.177.29 கோடியிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாநகராட்சிகளிலும் மொத்தமாக ரூ.1,004.34 கோடி மதிப்பில் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு இதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, பள்ளிப்பாளையம், ராணிப்பேட்டை, குளித்தலை, புச்சைபுளியம்பட்டி, துவாக்குடி, திருவாரூா், நாகப்பட்டினம், சத்தியமங்கலம் ஆகிய நகராட்சிகளிலும் ரூ.316.50 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்காக ரூ.1,320.84 கோடி நிதிகளை ஒதுக்கி தகுந்த நிா்வாக உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT