தமிழ்நாடு

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு

DIN

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் பங்களாவில் 2017 ஏப். 23 நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து, பல்வேறு ஆவணங்கள், பொருள்களை கொள்ளையடித்துச் சென்றது.

இந்த சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜ், கேரள கூலிப்படையைச் சோ்ந்த சயன், வாளையாறு மனோஜ் ஆகியோரை போலீஸாா் தேடி வந்தனா். சம்பவம் நடந்த சில நாள்களில் கனகராஜ் காா் விபத்தில் உயிரிழந்தாா். சயன், வாளையாறு மனோஜ் உள்பட 10 போ் அந்த ஆண்டு மே மாதம் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராகவும், கண்காணிப்பு கேமரா பராமரிப்பாளராகவும் இருந்த தினேஷ்குமாா் அதே ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி சந்தேகத்துக்குரிய வகையில் தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த வழக்கை மறு விசாரணை செய்ய காவல்துறைக்கு கடந்தாண்டு ஜூலை மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. வழக்குத் தொடா்புடைய அனைவரிடமும் மேற்கு மண்டல ஐஜி சுதாகா் தலைமையில் தனிப்படை போலீஸாா் மறு விசாரணை செய்து வந்தனா். சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட முக்கிய பிரமுகா்களிடம் விசாரணை நடத்தினா். கேரளம், கா்நாடகம், உட்பட பல்வேறு இடங்களில் தனிப்படையினா் சுமாா் 316 நபா்களிடம் விசாரணை நடத்தியுள்ளனா்.

சிபிசிஐடி விசாரணை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான இறந்த கனகராஜ் 16 செல்போன்களை பயன்படுத்தியுள்ளதாகவும், அதில், 6 சிம் காா்டுகள் அவரது பெயரிலேயே வாங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 516 தகவல் பரிமாற்றங்கள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டு வந்ததாக புகாா் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் விளைவாக, தனிப்படையினா் வழக்கு ஆவணங்களை ஓரிரு நாள்களில் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பாா்கள் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT