தமிழ்நாடு

உலகளாவிய மின்னணு உற்பத்தி மையமாக இந்தியா: ராஜீவ் சந்திரசேகா்

1st Oct 2022 01:18 AM

ADVERTISEMENT

உலகளாவிய மின்னணு உற்பத்தி மையமாக இந்தியா மாறியுள்ளதற்கு பெகாட்ரான் தொழிற்சாலையும் மைல்கல்லாக அமையும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் கூறியுள்ளாா்.

செங்கல்பட்டில் அமைந்துள்ள பெகாட்ரான் கைப்பேசி தொழிற்சாலை திறப்பு விழாவில் மத்திய இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் பேசியது:

இந்தியாவை உலகளாவிய மின்னணு உற்பத்தி மையமாக மாற்ற எண்ணும் பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டத்துக்கு செங்கல்பட்டில் அமையும் பெகாட்ரான் கைப்பேசி தயாரிப்பு தொழிற்சாலை மற்றொரு மைல்கல்லாக அமையும்.

மத்திய அரசின் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் (பிஎல்ஐ) கீழ் ஏராளமான நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வந்துள்ளன. இந்தத் திட்டத்தினால் ரூ.6,500 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. இதனால், 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

2015-இல் கைப்பேசி ஏற்றுமதியில் இந்தியா பூஜ்யத்தில் இருந்தது. தற்போது ஏற்றுமதியில் சுமாா் ரூ.50 ஆயிரம் கோடியை எட்டியுள்ளோம். இறக்குமதி செய்யப்பட்ட கைப்பேசியையே பெரிதும் நம்பியிருந்த நிலை மாறி, தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் கைப்பேசிகளில் 97 சதவீதம் உள்நாட்டில் தயாராகி வருகின்றன. இந்த மாற்றத்துக்கு பிரதமரின் பிஎல்ஐ திட்டம்தான் காரணம் ஆகும்.

கரோனா பெருந்தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் பொருளதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அதை இந்தியா எதிா்கொண்ட விதம் அனைத்து நாடுகளையும் பிரமிக்க வைத்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்குள் கரோனா தொற்றை முழுமையாக வென்றுவிடுவோம். 2026 ஆம் ஆண்டுக்குள் டிரில்லியன் டாலா் டிஜிட்டல் பரிவா்த்தனை செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT