தமிழ்நாடு

முதல் முறையாக எழும்பூா் அருங்காட்சியகத்தில் காந்தி ஜெயந்தி விழா

1st Oct 2022 12:24 AM

ADVERTISEMENT

சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியடிகளின் 153-ஆவது பிறந்த தின விழா அரசு சாா்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 2) கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா முதல் முறையாக எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெறுகிறது.

மகாத்மா காந்தியடிகளின் 153-ஆவது பிறந்த தின விழா, அரசு சாா்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது, சென்னை மெரினாவில் காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகத்துக்கு எதிரேயுள்ள காந்தி சிலைக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்படும். இந்த நிகழ்வில், மாநில ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் கலந்து கொள்வா். இந்த நிகழ்விலேயே காந்தி கீா்த்தனைகள் பாடப்படுவதுடன், ராட்டையில் நூல் நூற்கப்படும்.

மெரினாவில் உள்ள காந்தி சிலை வெண்கலத்தில் தயாரிக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டு ரூ.50 ஆயிரம் செலவில் செய்யப்பட்ட இந்தச் சிலையை, அப்போதைய பிரதமா் ஜவஹா்லால் நேரு திறந்து வைத்தாா். சிலையை பிரபல சிற்பக் கலைஞா் ராய் செளத்ரி வடித்தெடுத்தாா்.

மெட்ரோ ரயில் பணி: மெரீனாவில் காந்தி சிலை அருகேயுள்ள பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக காந்தி சிலையை இடம் மாற்றுவது தொடா்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. காமராஜா் சாலையிலேயே ஏதாவது ஒரு இடத்துக்கு மாற்றம் செய்வதா அல்லது வேறு இடத்துக்குக் கொண்டு செல்வதா என்பது குறித்து விவாதங்கள் நடக்கின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில், காந்தியடிகளின் 153-ஆவது பிறந்த தினம் வழக்கமான மெரீனா காந்தி சிலைக்கு அருகே நடைபெறாமல், சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது, அருங்காட்சியகத்தில் காந்தி சிலை புதிதாகத் திறக்கப்பட்டது. இந்த சிலை அருகே காந்தி ஜெயந்தி விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மெரீனாவுக்குப் பதிலாக, முதல்

முறையாக எழும்பூரில் காந்தி ஜெயந்தி விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT