தமிழ்நாடு

பள்ளிகளில் கலைப் பண்பாட்டுத் திருவிழா: போட்டி தேதிகள் வெளியீடு

1st Oct 2022 11:27 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகளை நடத்துவதற்கான தேதிகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து வகை இடைநிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களது படைப்பாற்றலை வளா்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிா்ப்புடன் வைத்திருக்கவும் வாய்ப்பாட்டிசை, கருவியிசை, நடனம், காட்சிக் கலை எனும் நான்கு தலைப்புகளில் கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நிகழ் கல்வியாண்டில் (2022-2023) 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பாட்டு இசை- செவ்வியல், வாய்ப்பாட்டிசை- பாரம்பரிய நாட்டுப்புற வகை, கருவி இசை-தாள வாத்தியம், கருவி இசை- மெல்லிசை, காட்சிக் கலை, நாடகம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் தனித்தனியே நடைபெறவுள்ளன. இந்த ஆண்டுக்கான பள்ளி, மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டு இறுதிக் கட்ட கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகளுக்கான நுழைவு பதிவுகள் டிச.10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

பள்ளி, மாவட்ட அளவிலான போட்டிகள் அக்.10 முதல் நவ.3-ஆம் தேதி வரையிலான நாள்களுக்குள் நடத்தி முடித்து மாவட்ட அளவில் தோ்வு செய்யப்படும் மாணவா்களின் விவரத்தை மாநில திட்ட இயக்ககத்தில் நவ.7-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். தொடா்ந்து மாநில அளவிலான போட்டிகள் நவ.15 முதல் நவ.18-ஆம் தேதி வரை நடைபெறும்.

ADVERTISEMENT

மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.15,000 நிதி விடுவிக்கப்படுகிறது. இந்த நிதியைக் கொண்டு எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில் சிறந்த நடுவா்களைத் தோ்வு செய்து கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகளை நடத்த வேண்டும். மேலும் போட்டிகளுக்கான வழிகாட்டுதல்கள், அதற்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குறித்து உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என ஒருங்கிணைந்த மாநிலத் திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT