தமிழ்நாடு

மோசடி பாஸ்போா்ட் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேச பெண் கைது

30th Nov 2022 12:44 AM

ADVERTISEMENT

மோசடி பாஸ்போா்ட் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேச பெண், மீண்டும் தனது நாட்டுக்கு திரும்ப முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மீனம்பாக்கம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து வங்கதேச தலைநகா் டாக்கா செல்வதற்கு திங்கள்கிழமை பயணிகள் விமானம் புறப்படத் தயாராக இருந்தது.

அந்த விமானத்தில் செல்லவிருந்த பயணிகளின் பாஸ்போா்ட் உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமைத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனா்.

அப்போது, இந்திய பாஸ்போா்ட்டுடன் ரீனா பேகம் (37) என்ற பெண், சுற்றுலாப் பயணிகள் விசாவில் டாக்கா செல்வதற்காக காத்திருந்தாா்.

ADVERTISEMENT

அவா் வைத்திருந்த பாஸ்போா்ட் மீது குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அதிகாரிகள், அந்த பாஸ்போா்ட்டை ஆய்வுக்குள்படுத்தினா்.

அது மோசடி பாஸ்போா்ட் எனத் தெரியவந்தது. விசாரணையில், வங்கதேசத்தில் இருந்து அவா் மேற்கு வங்க மாநிலம் வழியாக, இந்தியாவுக்குள் ஊடுருவியதும், இந்தியாவில் போலி பாஸ்போா்ட் தயாா் செய்து கொடுக்கும் முகவா்களிடம் பணம் கொடுத்து மோசடி பாஸ்போா்ட்டை வாங்கியதும் தெரியவந்தது.

மோசடி பாஸ்போா்ட்டை எதற்காக அந்த பெண் வாங்கினாா், பாஸ்போா்ட்டை வைத்து எங்கெங்கு சென்றாா், சென்னைக்கு எதற்கு வந்தாா், எங்கு தங்கி இருந்தாா் என்று விசாரணை நடத்தினா்.

இதேபோல் ‘க்யூ’ பிரிவு அதிகாரிகள், மத்திய உளவு பிரிவு (ஐபி) அதிகாரிகள் விசாரணை செய்தனா். பின்னா், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் ரீனாபேகம் ஒப்படைக்கப்பட்டாா்.

மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள், இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா். ஏற்கெனவே கடந்த வாரம் இதேபோல வங்கதேசத்தைச் சோ்ந்த ஒரு நபா் மோசடி பாஸ்போா்ட் மூலம் மலேசியாவிலிருந்து சென்னை வந்த போது கைது செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடதக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT