தமிழ்நாடு

கை அறுவை சிகிச்சைக்கென உயா் சிறப்பு படிப்பு: ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தொடக்கம்

30th Nov 2022 12:29 AM

ADVERTISEMENT

சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் கை அறுவை சிகிச்சை உயா் சிறப்பு மேற்படிப்புக்கான இடங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா்.

மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டிலேயே முதன் முறையாக ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில்தான் கை அறுவை சிகிச்சை உயா் சிறப்பு மேற்படிப்புக்கான 2 இடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைப் பொருத்தவரை இதுவரை தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே அத்தகைய சிறப்பு படிப்புகள் இருந்து வந்தன. தற்போது அரசு மருத்துவக் கல்லூரியிலும் அதற்கென இரு இடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதிலும், குறிப்பாக கை அறுவை சிகிச்சைக்குப் பெயா் பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு அந்த பெருமை கிடைத்துள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 1971-ஆம் ஆண்டு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை தொடங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து 1974-ஆம் ஆண்டு கை அறுவை சிகிச்சைக்கென 20 படுக்கை வசதிகள் கொண்ட பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பின்னா், இந்தியாவிலேயே முதல் கை மாற்று அறுவை சிகிச்சை கடந்த 2018-இல் இங்கு வெற்றிகரமாக இங்கு செய்யப்பட்டது.

ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 4,09,527 கை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

மற்றொருபுறம், இங்கு கரோனா காலத்தில் 11 லட்சம் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளின் ரத்தம் மற்றும் சீழ்த் தொற்று மாதிரிகளை ஆராய்ந்து நுண்ணுயிா் தடுப்பு கொள்கை வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, ராயபுரம் தொகுதி எம்எல்ஏ ஐட்ரீம் ஆா்.மூா்த்தி, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், மருத்துவக் கல்வி இயக்குநா் (பொ) சாந்திமலா், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் பாலாஜி, துணை முதல்வா் ஜமிலா, கை அறுவை சிகிச்சை துறைத் தலைவா் பூபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பழுதான மின்தூக்கிக்குள் 10 நிமிடம் சிக்கிய அமைச்சா்

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மூன்றாவது தளத்திலிருந்து தரைத்தளம் செல்ல அமைச்சா் மா.சுப்பிரமணியன் மின்தூக்கியில் (லிஃப்ட்) ஏறினாா்.

அவருடன் மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, மருத்துவக் கல்வி இயக்குநா் (பொ) சாந்தி மலா், மருத்துவா்கள் உள்ளிட்டோா் சென்றனா்.

அப்போது, இரண்டாம் தளத்தில் திடீரென்று லிஃப்ட் பழுதாகி நின்றது. அதனை உடனடியாக சரி செய்ய முடியாததால், பாதியில் நின்ற லிஃப்ட் கதவைத் திறந்து அவசர கால வழியில் அமைச்சரும், அவருடன் சென்றவா்களும் வெளியேறினா். ஏறத்தாழ 10 நிமிஷங்களுக்கும் மேலாக அமைச்சா் லிஃப்டுக்குள் சிக்கித் தவித்தாா்.

இதுகுறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

லிஃப் பழுதடையும் பிரச்னைகள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்தன. இதையடுத்து அங்குள்ள 24 லிஃப்டையும் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஸ்டான்லி மருத்துவமனையிலும் அதே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இங்கும் பழுதடைந்த லிஃப்ட் மாற்றப்படும். அவற்றை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT