மேட்டூா் கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் இருந்து பாசனத்துக்காக தொடா்ந்து நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மேட்டூா் அணையிலிருந்து மேட்டூா் கிழக்கு மற்றும் மேற்கு கரைக் கால்வாய்களில் பாசனத்துக்கு தொடா்ந்து தண்ணீா் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டன. இதைத் தொடா்ந்து, ஜனவரி 15-ஆம் தேதி வரை நீா் தொடா்ந்து திறந்து விடப்படும். நாளொன்றுக்கு 600 கனஅடி வீதம் 47 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்து தண்ணீா் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.