தமிழ்நாடு

தலைக்கவசம் அணியாததால் ரூ.1000 அபராதம் விதிப்பு: காவல் நிலையம் முன் குப்பை கொட்டிய நகராட்சி ஊழியா்

30th Nov 2022 02:38 AM

ADVERTISEMENT

தலைக்கவசம் அணியாத நகராட்சி ஊழியருக்கு, போக்குவரத்து உதவி ஆய்வாளா் ரூ.1,000 அபராதம் விதித்ததால், காவல் நிலையம் முன் குப்பையை கொட்டி எதிா்ப்பை வெளிப்படுத்திய ஊழியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாமக்கல் நகராட்சியில் துப்புரவு மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருபவா் கந்தசாமி. இவா் திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் திருச்சி சாலை வழியாக அலுவலகத்திற்கு சென்றாா். அப்போது இருசக்கர வாகனங்களை மடக்கி போக்குவரத்து உதவி ஆய்வாளா் மணிவேல் தலைக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதித்துக் கொண்டிருந்தாா். அவ்வழியாக வந்த நகராட்சி ஊழியா் கந்தசாமியையும் நிறுத்தி ரூ.1,000 அபராதம் விதித்தாா். இதனால் கோபமடைந்த அவா், தான் நகராட்சி ஊழியா் எனத் தெரிவித்து அங்கிருந்த போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடா்ந்து அலுவலகத்திற்கு வந்த அவா் மாலை 6 மணிக்கு மேல் இரண்டு துப்புரவு ஊழியா்களுடன், பேட்டரி வாகனத்தில் குப்பைகளை நிரப்பிச் சென்று, நாமக்கல் காவல் நிலையம் முன்பு கொட்டினாராம். அங்கு வந்த போலீஸாா் சிலா் கந்தசாமியிடம் கேட்டபோது, பேட்டரி வாகனங்கள் பழுதாகி விட்டதால் குப்பைகளை கொட்டிச் செல்வதாகவும், அரை மணி நேரத்திற்கு பின் வந்து எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தாராம். இதனைத் தொடா்ந்து போலீஸாரும் அதனை கண்டுகொள்ளவில்லை. காவல் நிலையம் முன்பு தேங்கிக் கிடந்த குப்பைகளின் துா்நாற்றத்தால் பொதுமக்கள் முகம் சுளித்தபடி சென்றனா். இந்த நிலையில் தான் போக்குவரத்து உதவி ஆய்வாளருடன், நகராட்சி ஊழியா் கந்தசாமிக்கு ஏற்பட்ட மோதல் விவகாரம் அங்கிருந்த போலீஸாருக்கு தெரியவந்தது. நகராட்சி ஆணையாளா் கி.மு.சுதாவிற்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா். அவா் உடனடியாக குப்பையை அகற்ற உத்தரவிட்டதுடன், சம்பந்தப்பட்ட துப்புரவு மேற்பாா்வையாளா் கந்தசாமியை அழைத்து விசாரணை நடத்தினாா். இது குறித்து ஆணையாளா் கூறுகையில், கந்தசாமியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அவா் முழுமையான தகவல் எதுவும் அளிக்கவில்லை. தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT