தமிழ்நாடு

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையை 8 வழி சாலையாக விரிவாக்க வேண்டும்: அன்புமணி

29th Nov 2022 05:04 PM

ADVERTISEMENT

உயிர்களைப் பலிவாங்கும் சாலையாக மாறியுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடா்பாக அவர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 

சென்னை - திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆண்டுகளில் 6,131 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன; அவற்றில் 2,076 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. 

சென்னையிலிருந்து திருச்சி வரையிலான 334 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2018 ஜனவரி முதல் 2022 ஜூன் மாதம் வரையிலான நான்கரை ஆண்டுகளில் நிகழ்ந்த சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்களை தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் மூலம் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில் நடைபெற்ற மொத்தம் 6,131 சாலை விபத்துகளில் 2,076 பேர் உயிரிழந்துள்ளனர்; 7,733 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துகளுக்கு முக்கியக் காரணம் சாலைகளில் போதுமான அளவில் சேவை சாலைகள் இல்லாததும், சாலைகளின் வடிவமைப்பு மிகவும் மோசமாக இருப்பதும் தான்.

ADVERTISEMENT

படிக்க: தில்லி பாண்டவ் நகர் கொலை: 6 உடல்பாகங்கள் மீட்பு; ஆயுதங்களைத் தேடும் காவல்துறை!

தமிழ்நாட்டின் மிக முதன்மையான சாலை சென்னை - திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலை தான். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், காவிரி பாசன மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், வடக்கு தமிழகத்தின் சில மாவட்டங்கள் என தமிழ்நாட்டின்  80% பகுதிகளில் இருந்து சென்னை வருவதற்கு  இந்த சாலை தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் போதிலும், அதற்கான நடவடிக்கைகளை  இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் மேற்கொள்ளாதது தான் விபத்துகள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் 1.40 லட்சம் வாகனங்கள் தினமும் பயணிக்கின்றன. இது அதன் கொள்ளளவை விட 4 மடங்கு அதிகம். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்தும் கூட, அது குறைந்தபட்சம் 6 வழிச்சாலையாகவோ,  8 வழிச்சாலையாகவோ மேம்படுத்தப்படாதது தான் விபத்துகள் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாகும்.

கரோனா காலத்தில் குறைந்திருந்த போக்குவரத்து இப்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை சராசரியாக ஒன்றரை லட்சம் என்ற அளவை அடுத்த சில மாதங்களில் எட்டக்கூடும். அத்தகைய சூழலில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை அரசு தடுக்க வேண்டும். அதற்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச் சாலையாக மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT