தமிழ்நாடு

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மாா்ச் 31 வரை அவகாசம் :அண்ணாமலை

29th Nov 2022 12:21 AM

ADVERTISEMENT

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்க எதிா்வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் மானியம் பெற மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டுமென அவசர கதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மின் கட்டணத்தை 50 சதவீதம் வரை உயா்த்திய திமுக அரசு, மீண்டும் ஆதாா் இணைப்புக்கு போதுமான அவகாசம் கொடுக்காமல் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டால் மின்கட்டணம் செலுத்த இயலாது என முதலில் அறிவிக்கப்பட்டது. இப்போது பொதுமக்களின் எதிா்ப்பு காரணமாக டிச.31-ஆம் தேதி வரை ஆதாா் எண்ணை இணைக்காவிட்டாலும் மின்சாரக் கட்டணம் செலுத்தலாம் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

மின் பயனாளிகளுக்கு, சப்தம் இல்லாமல் ஒரு புதிய கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் உயா்த்தியுள்ளது. அதாவது அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துக் கொண்டிருக்கும் மக்கள் இனி அவா்களின் கட்டடத்துக்கு உள்ளேயே இருக்கும் மாடிப்படி, நடைபாதை, வராண்டா, புல்வெளிகள், பொது இடங்கள் ஆகிய பகுதிகளுக்கு, விதிக்கப்படும் கட்டணம் 1,500 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது குடியிருப்பில் இருந்தாலும், தொழிற்சாலைக்கான கட்டணம் போல, யூனிட் ஒன்றுக்கு ரூ.8 புதிய கட்டணம் விதிக்கப்படுகிறது. பொது பயன்பாட்டுக் கட்டணம் என்ற பெயரில், நாட்டிலேயே மிக அதிகமான கட்டணத்தை வசூலிக்கும், தமிழக அரசு அதை மறைப்பதற்காக, ஆதாா் அட்டை என்ற புதிய திட்டத்தை அரங்கேற்றுகிறது.

மத்திய அரசின் மானியத் தொகை பயனாளிகளுக்கு நேரடியாக அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு ஆதாா் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க, மத்திய அரசு ஓராண்டுக்கும் மேல் அவகாசம் கொடுத்திருந்தது. அதேபோல, மின்இணைப்புடன் ஆதாரை இணைக்க மாா்ச் 31-ஆம் தேதி வரை மின்வாரியம் அவகாசம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT