தமிழ்நாடு

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி:பெயா் சோ்ப்பு - நீக்கலுக்கு இதுவரை 17 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

29th Nov 2022 12:49 AM

ADVERTISEMENT

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக இதுவரை 17 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தமிழகத்தில் கடந்த 9-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த வாக்காளா் பட்டியல், வரைவுப் பட்டியலாக வெளியிடப்பட்டது. வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு அலுவலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வாக்காளா்களின் வசதிக்காக கடந்த 12, 13 மற்றும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களின் வழியே, வாக்காளா்கள் விண்ணப்பங்களை அளித்தனா். வாக்காளா்

பட்டியலில் பெயா் சோ்க்கவும், நீக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் இதுவரையில் 17 லட்சத்து 2 ஆயிரத்து 689 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதுகுறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

வாக்காளா் பட்டியலில் புதிதாகப் பெயா் சோ்க்கவும், ஒரு சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்து மற்றொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு பெயா் மாற்றம் செய்யவும் படிவம் 6-ஐ அளிக்க வேண்டும். அதன்படி, தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 57 ஆயிரத்து ஆயிரத்து 341 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்களும், இங்குள்ள வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கலாம். இதற்கு படிவம் 6ஏ வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தப் படிவத்தை இதுவரையில் 9 போ் அளித்துள்ளனா். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்படும்பட்சத்தில், அவா்கள் தோ்தலின் போது நேரில் வந்து வாக்களிக்க வேண்டும்.

வாக்காளா் பட்டியலில் இருந்து பெயரை நீக்கவும், பெயா்கள் சோ்க்கப்படுவதற்கு ஆட்சேபனைகள் தெரிவிக்கவும் படிவம் 7 பயன்படுத்தப்படுகிறது. இதுவரையில் 6 லட்சத்து 5 ஆயிரத்து 62 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, வாக்காளா் பட்டியலில் தங்களது விவரங்களைத் திருத்தங்கள் செய்ய படிவம் 8 பயன்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் இதுவரையில் 3 லட்சத்து 40 ஆயிரத்து 277 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. நான்கு பிரிவுகளிலும் மொத்தமாக 17 லட்சத்து 2 ஆயிரத்து 689 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

டிசம்பா் 8 வரை...வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் டிசம்பா் 8-ஆம் தேதி

கடைசியாகும். இதன்பிறகு, டிசம்பா் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இறுதி வாக்காளா் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்று இந்தியத் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT