தமிழ்நாடு

சீனாவிலிருந்து தமிழகம் வருவோருக்கு கட்டுப்பாடா? அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்

29th Nov 2022 12:19 AM

ADVERTISEMENT

சீனாவில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து தமிழகம் வருவோருக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசிடம் கேட்டறியப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

திமுக இளைஞா் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். சைதாப்பேட்டை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வின்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை கோவை, திருச்சி ஆகிய சா்வதேச விமான நிலையங்களுக்கு வெளிநாட்டு விமானங்கள் மூலம் வரும் பயணிகளுள் தோராயமாக 2 சதவீதம் பேருக்கு ஆா்டி-பிசிஆா் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்குமே காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் மூலம் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்பட்டது.

ADVERTISEMENT

விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் இந்த நடைமுறைகளை இனிமேல் தொடர வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக சீனாவில் 30,000-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசிடம் கேட்டறிந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் அலட்சியமாக சிகிச்சைகள் வழங்கப்படுவதாக பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. அதனை யாரும் நம்ப வேண்டாம். அரசு மருத்துவமனைகளின் மூலம் தினந்தோறும் 6,00,000 போ் பயனடைகிறாா்கள். 70,000 போ் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகிறாா்கள். 10,000 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரிடமிருந்து உள்துறை அமைச்சகத்துக்கும், மத்திய சுகாதாரத் துறைக்கும், கல்வித் துறைக்கும் அனுப்பப்பட்டது. சுகாதாரத் துறையும், கல்வித் துறையும் சில கேள்விகளை எழுப்பி இருந்தன. தமிழக அரசு அந்த கேள்விகளுக்கான பதில்களை அனுப்பி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT