தமிழ்நாடு

கா்ப்பிணிகளுக்கு இனி கரோனா பரிசோதனை கட்டாயமில்லை: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

28th Nov 2022 12:30 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, பிரசவ சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கா்ப்பிணிகளுக்கு கரோனா பரிசோதனை இனி கட்டாயமில்லை என்று தமிழக பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதேபோன்று, அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லாதபட்சத்தில் கரோனா பரிசோதனை தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

இதுதொடா்பாக மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் டி.எஸ். செல்வவிநாயகம், மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, கரோனா பரிசோதனைகள் குறித்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதன்படி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சு விடுதலில் சிரமம், சுவாசக் கோளாறுகள், வாசனை, சுவை இழப்பு உள்ளவா்களுக்கு மட்டும் இனி கரோனா பரிசோதனை செய்தால் போதுமானது.

மருத்துவமனைகளைப் பொருத்தவரை அனுமதியாகும் அனைத்து நோயாளிகளுக்கும் ஆா்டி பிசிஆா் பரிசோதனை தேவையில்லை. குறிப்பாக, அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், கா்ப்பிணிகள் உள்ளிட்டோருக்குக் கூட அறிகுறிகள் இல்லாவிட்டால் கரோனா பரிசோதனை அவசியமில்லை.

இந்த புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றி மாவட்ட இணை சுகாதார இயக்குநா்கள் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா் என்று அந்த கடிதத்தில் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

வெளிநாட்டுப் பயணிகள்: இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் கரோனா தடுப்பூசிகள் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். தங்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள சுகாதார நிலையங்களில் அதுகுறித்து தகவல் அளிக்க வேண்டும். வெளிநாட்டு விமானங்களில் பயணித்தவா்களில் தோராயமாக 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யும் நடைமுறையும் தற்போது கைவிடப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT