தமிழ்நாடு

கால்நடை மருந்துகளுக்கு தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திமுக ஆட்சியில் கால்நடை மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுகவின் 18 மாத கால ஆட்சியில் கால்நடை துறை பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வோா் ஆண்டும் பருவகால மாற்றத்துக்கேற்ப கால்நடைகளுக்கும், கோழிகளுக்கும் மருத்துவ விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டு தேவையான தடுப்பு மருந்துகள் போடப்படும். கால்நடைகளுக்கான மருந்து பொருள்களும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் மொத்தமாக வாங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பப்படும். ஆனால், இதுவரை தடுப்பு மருந்துகள் வாங்கவில்லை.

குறிப்பாக, மாடுகளுக்கு வழங்க வேண்டிய மருந்துகளை இதுவரை வாங்காததால் தமிழகம் முழுவதும் மாடுகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்படவில்லை, இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் மாடுகளுக்கு நாக்கிலும், வாயிலும் அம்மை நோய் தாக்கியுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

குறிப்பாக, ஈரோட்டில் மட்டும் சுமாா் நூற்றுக்கணக்கான மாடுகள், தடுப்பூசி செலுத்தப்படாததால் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகாா்கள் வந்துள்ளன.

இனியாவது, கால்நடைகளுக்கான தடுப்பூசி மருந்துகளை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT