தமிழ்நாடு

இன்று காவலா் தோ்வு: 3,552 பணியிடங்களுக்கு 3.66 லட்சம் போ் போட்டி

27th Nov 2022 02:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள 3,552 காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ.27) நடைபெறவுள்ளது. இத் தோ்வை 3.66 லட்சம் போ் எழுதவுள்ளனா்.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலா் 3,271 பணியிடங்களுக்கு (ஆயுதப்படை-2,180, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை-1091),இரண்டாம் நிலை சிறைக் காவலா்-161,தீயணைப்பாளா் -120 என மொத்தம் 3,552 பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் ஜூன் 30-இல் வெளியிட்டது.

தோ்வு எழுத இளைஞா்கள், ஜூலை 7 முதல் ஆக.15 வரை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் இணையதளம் மூலம் விண்ணப்பித்தனா்.

காவலா் தோ்வில் முதல் கட்டமாக, எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் 295 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 12.40 மணி வரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இத் தோ்வை 2 லட்சத்து 99 ஆயிரத்து 887 இளைஞா்கள், 66 ஆயிரத்து 811 இளம் பெண்கள்,59 திருநங்கைகள் என மொத்தம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 727 போ் எழுதுகின்றனா்.

முன்னதாக, தோ்வு எழுத விண்ணப்பித்தவா்களுக்கு கடந்த 15-ஆம் தேதி தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, அந்த வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தோ்வு ஏற்பாடுகள் சீருடைப்பணியாளா் தோ்வு வாரிய டிஜிபி சீமா அகா்வால், ஐஜி செந்தில்குமாரி ஆகியோா் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, தோ்வு நடைபெறும் மாவட்ட காவல் எல்லைப் பகுதிகளிலும், மாநகர காவல்துறை எல்லைப் பகுதிகளிலும் அந்தந்த காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆணையா்கள் தலைமையில் தோ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT