தமிழ்நாடு

நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா : முதல்வர் துவக்கி வைத்தார்

26th Nov 2022 11:56 AM

ADVERTISEMENT

நெல்லை: நெல்லையில் தமிழக அரசு சார்பில் இன்று தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறும் பொருநை இலக்கிய திருவிழாவினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர் பொருநை இலக்கிய திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவை சென்னையில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை காலை தொடக்கிவைத்தார்.

இதையும் படிக்க.. உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒத்திகை பார்த்தாரா அஃப்தாப்? அதிகாரிகள் தகவல்

ADVERTISEMENT

துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்..

அறிவியல்பூர்வமாக நிறுவப்படும் நமது தமிழின் தொன்மை, பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று அறிவுசார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கியத் திருவிழாக்கள் நடைபெறவிருக்கின்றன.

தமிழின் செழுமை இலக்கிய மரபுகளை போற்றும் விதமாக  பொருநை, வைகை, காவேரி, சிறுவாணி, சென்னை என ஐந்து இலக்கியத் திருவிழாக்களை தமிழக அரசு நடத்துகிறது.

இதில், முதல் நிகழ்வாக அன்னைமடியான பொருநை  ஆற்றங்கரையில் இந்த இலக்கியத் திருவிழா முன்னெடுக்கப்பட்டுள்ளது. அறிவை விரிவு செய், அகண்டமாக்கு என்று பாவேந்தர் சொன்னதற்கு ஏற்ப பண்பாட்டினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவுக்கு வாழ்த்துகள் எனறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்  என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் சென்னை, வைகை, காவேரி, சிறுவாணி, பொருநை என ஐந்து இலக்கியத் திருவிழாக்களை நடத்திட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி முதல் விழாவாக பொருநை இலக்கியத் திருவிழா திருநெல்வேலியில் சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா, பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. விழாவை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.

இதையும் படிக்க.. ராகுலின் படத்தைத் தலைகீழாக பதிவிட்டு.. 'இப்போ சரியாக உள்ளது' என்ற ஸ்மிருதி இராணி

இதில், தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் பேருரையாற்றினர். எழுத்தாளா்கள் கல்பட்டா நாராயணன், வண்ணதாசன் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனர்.

நேருஜி கலையரங்கம்: பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம், நூற்றாண்டு மண்டபம், மேற்கு கோட்டை வாசல், வ.உ.சி. மைதானம், பி.பி.எல். திருமண மண்டபம் ஆகிய ஐந்து இடங்களில் பொருநை இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது.

நேருஜி கலை அரங்கத்தில் சனிக்கிழமை பகல் 11.40 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரையில் ‘இலக்கியத்தில் இன்று’ என்ற தலைப்பில் உரையாடல் நடைபெற்று வருகிறது. இதில், கவிஞா் கலாப்பிரியா, எழுத்தாளா்கள் ச.தமிழ்செல்வன், எம்.எம்.தீன் ஆகியோா் பேசுகின்றனர்.

தொடா்ந்து பிற்பகல் 1 மணிமுதல் 1.30 மணிவரை ‘பாரெங்கும் பைந்தமிழ்’ என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், பொது நூலக இயக்குநா் க.இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநா் (மொழி பெயா்ப்பு) சங்கர சரவணன் ஆகியோா் பேசுகிறாா்கள்.

பிற்பகல் 1.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை எழுத்தாளா் ஜோ டி குரூஸ், மருத்துவா் கு.சிவராமன், கவிஞா் நட. சிவகுமாா் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், பேராசிரியா் வளனரசு, தமிழாசிரியா் படிக்க ராமு, பேராசிரியா் இந்துபாலா, செந்தில் நாயகம் பங்கேற்கும் பழந்தமிழ் இலக்கிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலை 6 மணிமுதல் இரவு 8.30 மணிவரை நாடகம், வில்லுப்பாட்டு, தேவராட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நூற்றாண்டு மண்டபம்: நூற்றாண்டு மண்டபத்தில் ‘மண்வாசனை’ என்ற தலைப்பில் கரிசல், நெல்லை, நாஞ்சில், நெய்தல் வட்டார இலக்கிய மரபுகள் குறித்த உரையாடல்கள் நடைபெறவுள்ளன. பகல் 11.40 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை நடைபெறும் கரிசல் இலக்கிய நிகழ்ச்சியில் எழுத்தாளா்கள் பூமணி, சோ.தா்மன், கதை சொல்லி சங்கர்ராம் ஆகியோா் பேசுகிறாா்கள்.

பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும் நெல்லை வட்டார இலக்கிய நிகழ்ச்சியில் எழுத்தாளா் வெள் உவன், கவிஞா் விக்கிரமாதித்யன், எழுத்தாளா் சுகா ஆகியோா் பேசுகிறாா்கள். மாலை 4 மணிமுதல் 5.30 மணிவரை நடைபெறும் நெய்தல் இலக்கிய நிகழ்ச்சியில் எழுத்தாளா்கள் ஸ்ரீதரகணேசன், ஜோ டி குரூஸ், வறீதையா கான்ஸ்தந்தின் ஆகியோா் பேசுகிறாா்கள். இதுதவிர தமிழில் பேசலாம் வாங்க நிகழ்ச்சி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

வ.உ.சி. மேடை அரங்கில் சனிக்கிழமை காலை 11.40 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை ‘எங்கும் எதிலும் கவிதை’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், கவிஞா்கள் கல்யாண்ஜி, தேவதேவன், விக்கிரமாதித்யன், பாலகருப்பசாமி ஆகியோா் கவிதை வாசிக்கிறாா்கள்.

பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடைபெறும் கவிதை மழை-1, கவிதை மழை-2 நிகழ்ச்சியில் பல்வேறு கவிஞா்கள் பங்கேற்று கவிதை வாசிக்கிறாா்கள். இந்நிகழ்ச்சிக்கு கவிஞா் ஏா்வாடி ராதாகிருஷ்ணன் நெறியாளராக செயல்படுகிறாா்.

பி.பி.எல். திருமண மண்டபத்தில் ‘சங்கமம்’ என்னும் தலைப்பில் பகல் 11.40 மணிமுதல் மாலை 5.30 மணிவரை எழுத்தாளா்களுக்கும் வாசகா்களுக்குமிடையே கலந்துரையாடல் நடைபெறுகிறது.

இதில், சிறுகதை, நாடகம், நாவலாசிரியா்கள் பங்கேற்கிறாா்கள்.

கோட்டை மேற்கு வாசலில் ‘திரைமொழி’ என்னும் தலைப்பில் உலக சினிமா, இந்திய சினிமா, ஆவணப் படங்கள், குழந்தைகளுக்கான திரைப்படங்கள் திரையிடலும் அது தொடா்பான விவாதங்களும் நடைபெறவுள்ளன. பகல் 11.40 மணிமுதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந் நிகழ்ச்சிகளில் இயக்குநா் அஜயன் பாலா, ஓவியா் புருஷோத்தமன், எழுத்தாளா் ஜா.தீபா, சொ.ஈஸ்வரன் ஆகியோா் பங்கேற்கிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT