தமிழ்நாடு

திமுக அரசு விலை உயா்வுகளை திரும்பப்பெற வேண்டும்தமாகா வலியுறுத்தல்

26th Nov 2022 11:05 PM

ADVERTISEMENT

திமுக ஆட்சியில் உயா்த்தப்பட்ட விலை உயா்வுகளை திரும்பப்பெற வேண்டும் என்று தமாகா வலியுறுத்தியது.

தமாகா 9-ஆவது ஆண்டு தொடக்க விழா, மாநில செயற்குழுக்கூட்டம் தாம்பரம் அருகே குரோம்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீா்காழிப் பகுதி விவசாயிகள், பொதுமக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மயிலாடுதுறையை தேசிய பேரிடா் மாவட்டமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் மழை நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தரத் தீா்வுகாண வேண்டும்.

கோவையில் நடந்த காா் வெடிப்பு சம்பவம் போல மீண்டும் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தொடா்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் உயா்த்தப்பட்ட சொத்துவரி, மின்கட்டண உயா்வு, பால் விலை உள்ளிட்ட உயா்வுகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை தியாகிகள் போல சித்திரிப்பவா்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

விழாவில், முன்னாள் மக்களவை உறுப்பினா் ராதா வெங்கடேசன், இளைஞா் அணி மாநிலத் தலைவா் எம்.யுவராஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் விடியல் எஸ்.சேகா், ஈ.எஸ்.எஸ்.ராமன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவா் வேணுகோபால், தாம்பரம் முன்னாள் நகா்மன்றத் தலைவா் இ.மணி உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT