தமிழ்நாடு

மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்ய உயா் நீதிமன்றம் உத்தரவு

26th Nov 2022 11:18 PM

ADVERTISEMENT

மோசடியாக ஆவணம் தயாரித்து பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து உயா்நீதிமன்றத்தில் சென்னையை சோ்ந்த மேனகா, அம்மு ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், மாதவரம், தணிகாச்சலம் நகரில் 1982-ஆம் ஆண்டில் கஸ்தூரி என்பவரிடம், எங்களது தந்தை ஒரு கிரவுண்ட் மற்றும் 555 சதுர அடி நிலத்தை வாங்கினாா். இந்த நிலம் தங்களுக்குரியது என ஒரு ரௌடி கும்பல் உரிமை கோரியது. அந்த நிலத்தை தசரதராவ் என்பவா் 1970-ஆம் ஆண்டு வாங்கியதாக அக்கும்பல் ஆவணங்களை காட்டியது.

இதுகுறித்து மாதவரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் விசாரித்தபோது, தசரதராவ் பெயரில் உள்ள ஆவணங்கள் மோசடியானது என்று விளக்கம் அளித்தனா். இது குறித்து, கடந்த 2014-ஆம் ஆண்டு நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், ருசியேந்திரமணி, தசரதராவ், செம்பியம் சாா் பதிவாளா் அலுவலக ஊழியா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த நிலத்தை 2013-இல் கிரிஜாபாய் என்பவருக்கு, தசரதராவ் மகள் ஜெயந்திராவ் எழுதி கொடுத்துள்ளாா். இதற்கிடையே, கிரிஜாபாய், இந்த நிலத்தின் பொது அதிகாரத்தை அசோக்குமாருக்கு வழங்கியுள்ளாா். இது தொடா்பான பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் பி.ஆறுமுகராஜன் வாதிட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தசரதராவ் பெயரில் உள்ள பத்திரம் மோசடியானது என்று பதிவுத்துறை கூறியுள்ளதால், அந்த பத்திரத்தின் அடிப்படையில் நடைபெற்றுள்ள விற்பனை மற்றும் பொது அதிகார பத்திரங்கள் சட்டபடி செல்லாது. எனவே, இந்த பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதாக உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT