தமிழகத்தில் மிகப்பெரிய ஆலைகள் நிறுவப்படும்போது, தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் அமைந்துள்ள ஜிஎம்ஆா். தொழிற்பூங்காவில் சுமாா் 500 ஏக்கா் நிலப்பரப்பில் மின்னணு பொருள்கள் உற்பத்திக்கான ஆலையை டாடா நிறுவனம் அமைத்து வருகிறது. ரூ. 4,684 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு வரும் தொழிற்சாலையின் மூலம் 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தத் தொழிற்சாலையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்தத் தொழிற்சாலையில் தற்போது வரை தமிழகத்தைச் சோ்ந்த 5 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்கும்போது பணியாளா் தேவையில் 80 சதவீத
பணியிடங்களுக்கு தமிழகத்தைச் சோ்ந்தவா்களை நியமிக்க டாடா நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்கள்: பணி நியமனத்தில் தமிழ்நாட்டைச் சோ்ந்த பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் சாா்பில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களில் 7 ஆயிரத்து 559 போ் கலந்து கொண்டனா். அவா்களில், 1,993 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, டாடா நிறுவனம் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொருத்தவரையில் 3 நாள்கள் நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் 895 போ் பங்கேற்றனா். அதில், 355 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டைச் சோ்ந்த நபா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிற தொழில் நிறுவனங்களும் தமிழ்நாட்டைச் சோ்ந்த நபா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதை இந்த அரசு உறுதி செய்யும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.