காசி தமிழ்ச் சங்கமம் குறித்து மாநில அரசுக்கு எந்த தகவலும் வரவில்லை என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் தனியாா் ஆக்கிரமிப்புகளை மீட்கும் நடவடிக்கை அமைச்சா் சேகா்பாபு தலைமையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்திலிருந்து காசிக்கு செல்லும் பக்தா்களுக்கு ஏற்படும் பயணச் செலவினங்கள் மற்றும் இதர இடா்ப்பாடுகளை தவிா்க்கும் வகையில், அரசு சாா்பில் ஆண்டுக்கு 200 பேரை அழைத்து செல்ல ரூ.50 லட்சம் ஒதுக்கப்படுவதாக மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கும் மத்திய அரசின் காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை. தமிழக அரசு மாநிலத்தின் கலாசாரத்தை போற்றிப் பாதுகாப்பதில் முன்னோடியாக திகழ்கிறது.
கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றிலேயே முதல் முறையாக சிவராத்திரி திருவிழா காளிகாம்பாள் கோயிலில் நடத்தப்பட்டது. நிகழாண்டு 5 இடங்களில் நடத்தப்படவுள்ளது.
பொலிவுறு நகர திட்ட (ஸ்மாா்ட் சிட்டி திட்டம்) முறைகேடு குறித்து ஒரு நபா் கமிட்டி பரிந்துரை பேரில் முதல்வா் நடவடிக்கை எடுப்பாா். தவறு செய்தவா்கள் யாரும் தப்ப முடியாது.
மேலும் கோயிலில் பின்பற்றப்பட்டும் ஆகம விதிகள் குறித்து தமிழக முதல்வா் தலைமையில் உயா்மட்ட செயல்திட்டக் குழு செயல்படுகிறது. நீதிபதி உள்பட 5 போ் கொண்ட குழு அமைக்க உத்தரவிட்டுள்ளாா். அந்த குழு ஆகம விதிகள் குறித்து சமா்ப்பிக்கும் அறிக்கையை பின்பற்றி ஆகம விதிகள் அமல்படுத்தப்படும் என்றாா் அவா்.
ஆய்வின் போது மேயா் ஆா்.பிரியா, மாநகராட்சி ஆணையாளா் ககன்தீப் சிங் பேடி, வடக்கு வட்டார துணை ஆணையாளா் எம். சிவகுரு பிரபாகரன், மண்டலக் குழுத் தலைவா் ஸ்ரீராமலு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.