தமிழ்நாடு

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுவாதி மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி

25th Nov 2022 01:43 PM

ADVERTISEMENT


மதுரை: சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சுவாதியிடம், நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், திடீரென சுவாதி மயங்கி விழுந்தார். உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோகுல்ராஜ் கொலை வழக்குத் தொடர்பாக நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை சுவாதியிடம் எழுப்பி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க.. மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பில்  அவசரம் ஏன்?

ADVERTISEMENT

கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில் வாக்குமூலம் பெறப்பட்டுக் கொண்டிருந்த போது இடையே 15 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விசாரணை தொடங்கியது. கோல்குல்ராஜ் பற்றியும், கொலை நடந்தது பற்றியும் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பினார். இந்த நிலையில், விசாரணையின்போது சுவாதி திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணையின்போது நடந்தது என்ன?
கொலை நடந்த போது, கோகுல்ராஜ் உடன் ஒரு பெண் நடந்து வரும் சிசிடிவி காட்சியை சுவாதிக்குப் போட்டுக் காண்பித்து, கோகுல்ராஜுடன் நடந்து செல்லும் அந்தப் பெண் யார் என்று மூன்று முறை நீதிபதிகள் கேட்டதற்கு தெரியாது என்று கண்கலங்கியபடியே பதிலளித்தார்.

உண்மையை மனசாட்சிக்கு உள்பட்டு சொல்லுங்கள் என்று நீதிபதிகள் கூறியபோதும், சிசிடிவி பதிவின் க்ளோசப் காட்சியைப் பார்த்ததும் சுவாதி கண்ணீர் விட்டு அழுததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.

நீதிபதிகள் அறையில் ஆஜர்படுத்தப்பட்ட சுவாதியிடம், கோகுல்ராஜ் பற்றி கேட்கப்பட்டது. அப்போது, கோகுல்ராஜ் பின்னணி குறித்த எனக்கு எதுவும் தெரியாது என்று சுவாதி பதில் கூறியிருக்கிறார்.

சுவாதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது ஏன்?

நீதித்துறை மனசாட்சியை திருப்திபடுத்த சுவாதியை விசாரிக்க விரும்புவதாக உயர் நீதிமன்ற கிளை கூறியிருந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு, சுவாதி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதியை வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சுவாதி நீதிமன்றத்துக்கு இன்று காலை அழைத்துவரப்பட்டிருந்தார்.

நாமக்கல் மாவட்டம், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடா்பாக மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிக்க.. ரயில் என்ஜினையே களவாடிய பலே திருடர்கள்; மேம்பாலத்தைக் கூட விடவில்லையாம்

இந்தக் கொலை தொடா்பாக 10 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சங்கா் உள்ளிட்ட 5 போ் விடுதலை செய்யப்பட்டனா். ஆயுள் சிறைத் தண்டைனையை ரத்து செய்யக் கோரி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனா்.

கோகுல்ராஜின் தாய் சித்ரா இந்த வழக்கில் சங்கா் உள்ளிட்ட 5 பேரின் விடுதலையை எதிா்த்து மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். ஆனந்த் வெங்கடேஷ் அமா்வு, கீழமை நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தொடக்கக் காலத்தில் சுவாதி முக்கிய சாட்சியாக இருந்தாா் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் பிறரது வாக்குமூலங்களைப் பெற்ற போது, இடையில் ஏதோ நடைபெற்றதாக சந்தேகம் எழுகிறது. நீதித் துறையின் மனசாட்சியைத் திருப்திப்படுத்தும் வகையில், சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க நீதிமன்றம் விரும்புகிறது. இது கட்டாயம், தேவையான ஒன்று.

எனவே, சுவாதி, அவரது குடும்பத்தினருக்கு, நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சுவாதியை யாரும் சந்திக்கவோ, செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளவோ கூடாது. சுவாதி பயமின்றி நீதிமன்றத்துக்கு வருவதை காவல் துறை உறுதி செய்ய வேண்டும். விசாரணை அதிகாரி, சுவாதியை உயா்நீதிமன்ற நீதிபதிகள் அறையில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதன் அடிப்படையில், சுவாதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு, நீதிபதிகள் அறையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து, கோகுல்ராஜ் கொலை தொடர்பாக நீதிபதிகள் முன்னிலையில் சுவாதி வாக்குமூலம் அளித்து வந்த நிலையில், அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT