தமிழ்நாடு

ஆளுநரை திரும்பப் பெறக்கோரி நவ.29-ல் ராஜ்பவன் முற்றுகை: இரா. முத்தரசன்

25th Nov 2022 02:34 PM

ADVERTISEMENT

 

திருச்சி: தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் நவ.29-ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, திருச்சியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அவர் கூறியது:

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக 24 மணி நேரத்தில் புதிய தலைமை தேர்தல் அலுவலர் நியமனம் ஏன்? அனைத்து அமைப்புகளும் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், அரசியல் சட்டத்தை சீர்குலைத்து செயல்படும் வகையில் நடைபெற்று மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்தி மற்றும் சம்ஸ்கிருதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், தமிழ் குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், நடைமுறையில் நிகழ்வது வேதனை அளிக்கிறது.
சம்ஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழுக்குக் குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. உதட்டளவில் தமிழ் புகழ்ந்து பேசப்பட்டு சம்ஸ்கிருதத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எந்த ஒரு பிரதமரும் இதுபோன்று செயல்பட்டதில்லை.

தமிழக ஆளுநர் பல பிரச்சினை உருவாவதற்கு காரணமாக உள்ளார். பதவிக்கு ஏற்ப அவர் செயல்பட வேண்டும். மதச்சார்பின்மை நாடு என்பதற்கு எதிராக இந்தியா இந்துக்களின் நாடு என பகிரங்கமாக சொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது, இதற்காகவே அவரை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்.

ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 29 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும். 

இதேபோல, நவ.26-ல் (நாளை) அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் மாளிகையை நோக்கி விவசாய சங்கங்கள் நடத்தும் முற்றுகைப் போராட்டம் மற்றும் பேரணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. ஆதார் இணைக்காவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT