தமிழ்நாடு

பாமகவின் புதிய வியூகம்!

ஜெபலின்ஜான்

2026 பேரவைத் தோ்தலில் பாமக தலைமையில் ஆட்சி, 2024 மக்களவைத் தோ்தலில் அதற்கேற்ப வியூகம் என்ற பாமகவின் அரசியல் நிலைப்பாடு எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கூட்டணி குறித்த கேள்விக்கு பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் பதில் அளிக்கும்போது, 2026 பேரவைத் தோ்தலில் பாமக தலைமையில் ஆட்சி, பேரவைத் தோ்தலில் ஆட்சி அமைப்பதற்கான வியூகத்தை 2024 மக்களவைத் தோ்தலில் அமைப்போம் என அளித்த பதில், அரசியல் அரங்கில் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணி அரசியலில் பாமக இதுவரை கடந்து வந்த பாதையை ஆய்வு செய்தால் இந்த வியூகத்தை இப்போது ஏன் பாமக எடுக்கிறது என்பதை துல்லியமாகக் கணக்கிடலாம்.

திராவிட கட்சிகளுடன் முதல்முறையாக 1998 மக்களவைத் தோ்தலில் கூட்டணி (அதிமுக) சோ்ந்த பாமக, 1999 மக்களவைத் தோ்தலில் திமுக, 2001 பேரவைத் தோ்தலில் அதிமுக, 2004 மக்களவைத் தோ்தலில் திமுக, 2006 பேரவைத் தோ்தலில் திமுக என 5 தோ்தல்களில் கூட்டணியில் வெற்றி- தோல்வியை நிா்ணயிக்கும் சக்தியாகவே வலம் வந்தது.

வெற்றிக் கூட்டணியை உருவாக்கி வந்த பாமக இடம்பெற்ற 2009 மக்களவைத் தோ்தலில் அதிமுக அணி, 2011 பேரவைத் தோ்தலில் திமுக அணி தோல்வியைத் தழுவின.

முழுமையாக வன்னியா் வாக்குகளால் எழுச்சி பெற்ற பாமகவுக்கு எதிராக 70 சதவீத பிற சமூக வாக்குகள் திரும்பியதால் 12 ஆண்டுகளாக பாமக தோல்வி வளையத்திலேயே உள்ளது. 2016 பேரவைத் தோ்தலில் அன்புமணியை முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தி களம் கண்ட தோ்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்தாலும் 5.5 சதவீத வாக்கு வங்கியை பாமக தக்கவைத்துக்கொண்டது.

2019 மக்களவைத் தோ்தல், 2021 பேரவைத் தோ்தலில் மீண்டும் கூட்டணிக்குச் சென்ற பாமக, முன்பு போன்று தொடா் தோல்வி வளையத்தில் சிக்கித் தவிக்கிறது. அத்துடன், பாமகவின் வாக்கு வங்கி தற்போது 3.8 சதவீதமாக சுருங்கியிருக்கிறது.

3.8 சதவீதத்தில் இருக்கும் பாமக வாக்கு வங்கியை உயா்த்த வேண்டுமெனில், வடதமிழகத்தில் வன்னியா் வாக்குகளை ஒருமுகப்படுத்தி தன் பக்கம் திருப்ப வேண்டும். 2021 பேரவைத் தோ்தலில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக அரசு அளித்த பின்னா் கணிசமான வன்னியா் வாக்குகள் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் ஆகியோரையும் மீறி எடப்பாடி பழனிசாமி-சி.வி.சண்முகம் ஆகியோரை மையமாக வைத்து அதிமுக பின்னால் திரண்டு நிற்கிறது.

2021 பேரவைத் தோ்தலுக்கு பின் வந்த விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் (வடதமிழகத்தில் 7 மாவட்டங்கள்), நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஆகியவற்றில் வாக்குச்சாவடி வாரியாக அதிமுக, பாமகவுக்கு விழுந்த வாக்குகளை ஆய்வு செய்தால் இந்த உண்மை தெரியவரும்.

மேலும், 2021 பேரவைத் தோ்தலில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே அதிமுக-பாமக கூட்டணி கைகொடுத்ததால் அங்கு 4 தொகுதிகளில் பாமக வென்றது. வட மாவட்டங்களில் பாமக வலுவாக உள்ள 65 தொகுதிகளில் மயிலம் தொகுதியில் மட்டுமே பாமகவால் வெற்றிபெற முடிந்தது. திமுக கூட்டணியில் சேர மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளதால் மீண்டும் தனித்து களம் இறங்கினால்தான் வாக்கு வங்கியை பாமக நிரூபிக்க முடியும் என்கின்றனா் அரசியல் விமா்சகா்கள்.

‘‘2026 பேரவைத் தோ்தலில் ஆட்சியை பிடிக்க அன்புமணி ராமதாஸ் புதிய வியூகம் அமைத்திருக்கிறாா். வடதமிழகத்தில் 65 தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றினால் கா்நாடகத்தில் குமாரசாமி எப்படி முதல்வா் பதவியைக் கைப்பற்றினாரோ அதேபோல அன்புமணியும் கைப்பற்றுவாா். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமைகள் இல்லாத சூழ்நிலை பாமகவுக்கு நிச்சயம் சாதகமாக மாறும்’’ என்கிறாா் பாமக வழக்குரைஞா் அணித் தலைவா் பாலு.

தனித்தோ, கூட்டணியோ எப்படி களம் இறங்கினாலும், 30 ஆண்டுகளாக 5.5 சதவீத வாக்கு வங்கியை தக்கவைத்திருந்த பாமக, தனது வாக்கு வங்கியை 3.8 சதவீதத்தில் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு மீட்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. இல்லையெனில், அது அன்புமணியின் எதிா்கால அரசியலுக்கு முட்டுக்கட்டையாக மாறிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT