ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு இன்று தாக்கல் செய்தது.
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி கடத்தி கொலை செய்யப்பட்டார். கல்லணை செல்லும் சாலையில் பொன்னி டெல்டா பகுதியில் உடலை கைப்பற்றிய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள், பின்னர் சிபிசிஐடி என வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தினாலும், வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் உறவினர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் வழக்கிற்கு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளனர்.
இதையும் படிக்க | மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? அவசியமா?
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று தாக்கல் செய்துள்ளனர். மேலும், வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.