சென்னை, திருவான்மியூரில் உள்ள ஒரு வீட்டில் அனுமதியின்றி வைத்திருந்த 15 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழ்நாடு சிலைகடத்தல் பிரிவு குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட சிலைகள் சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புடையது. வீட்டின் உரிமையாளர் சென்னையில் உள்ள தனது வீட்டில் சிலைகளை மறைத்து வைத்திருந்தார்.
இந்நிலையில், வீட்டு உரிமையாளரிடம் சிலை வாங்கியதற்கான ஆவணங்கள், இந்தியத் தொல்லியல் துறையின் அங்கீகாரம் எதுவும் இல்லை என்று சிலை பிரிவு போலீசார் தெரிவித்தனர். வழக்கமான தொழிலை தவிர, பல ஆண்டுகளாகப் பழங்கால சிலைகள் விற்பனை செய்யும் தொழிலையும் செய்து வந்ததாக சிலையின் உரிமையாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடராஜர், அம்மன், பார்வதி, நந்தி, புத்தர் மற்றும் விநாயகர் உள்ளிட்ட பழங்கால சிலைகளை தரகர் விற்கவுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலறிந்து காவல் கண்காணிப்பாளர், சிலைகடத்தல் குற்றப்பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் முக்கிய சிலை சேகரிப்பாளர்களாக மாறு வேடமிட்டு தரகரை அணுவாகுவதற்கான திட்டத்தை வகுத்தனர்.
படிக்க: இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 20 பேர் பலி; 300 பேர் காயம்
தரகர் அதிக வற்புறுத்தலுக்குப் பின், சிலைகளைக் காட்ட ஈரோடு மாவட்டத்திலிருந்து சென்னை வந்தார். நவம்பர் 18-ம் தேதி திருவான்மியூரில் உள்ள வீட்டிற்கு அவர் வந்தவுடன், அவரைப் பிடிக்க டிஎஸ்பி முத்துராஜ் மற்றும் அவரது குழுவினர் தரகர் சுரேந்தரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிலைகடத்தல் பிரிவு போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தி 15 சிலைகளைக் கைப்பற்றினர்.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சி சைலேந்திர பாபு மற்றும் ஜெயந்த் முரளி ஆகியோர் சிறப்புக் குழுவைப் பாராட்டி, சிறப்பாகப் பணியாற்றிய குழுவினருக்கு வெகுமதியும் அறிவித்தனர்.