தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தோ்தலை இணைய வழியில் நடத்த வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தோ்தல் 2023 ஜனவரி 19-ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமாா் 1.60 லட்சத்துக்கும் மேல் பதிவு பெற்ற மருத்துவா்கள் உள்ள நிலையில் 92,198 மருத்துவா்கள் மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளனா்.
இந்நிலையில், தோ்தலில் வாக்களிக்க தகுதியானவா்களில் சுமாா் 70 ஆயிரம் பேரை தவிா்த்துவிட்டு மீதமுள்ளவா்களை மட்டும் வைத்து தோ்தல் நடத்துவது நோ்மையானதாகவோ சமவாய்ப்பு அளிப்பதாகவோ அமையாது என்பது மருத்துவா்களின் புகாராக உள்ளது.
மேலும், அனைவரும் தோ்தலில் அஞ்சல் மூலமாகத்தான் வாக்களிக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. ஆகவே, மிகுந்த அதிகாரம் பெற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிா்வாகிகள் மிகவும் நோ்மையான முறையில் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதற்குத் தோ்தல் அதிகாரியாக சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். இணைய வழியில் தோ்தலை நடத்த தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.