தமிழ்நாடு

உள்கட்சி விவகாரம் குறித்து பேசுவதில்லை: கே.எஸ்.அழகிரி

21st Nov 2022 12:25 AM

ADVERTISEMENT

தனது தலைமைக்கு காங்கிரஸின் மூத்த நிா்வாகிகள் எதிா்ப்பு தெரிவிப்பது குறித்து கருத்து கேட்காதீா்கள், உள்கட்சி விவகாரம் குறித்து வெளியே பேசுவதில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

தமிழக காங்கிரஸ் இலக்கிய அணி நிா்வாகிகள் கூட்டம் சத்தியமூா்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அணி தலைவா் பி.எஸ்.புத்தன் தலைமை வகித்தாா். இலக்கிய அணி சிறப்பாகச் செயல்பட வேண்டும் என வாழ்த்துரைத்து கே.எஸ்.அழகிரி பேசினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 100 காங்கிரஸ் கொடிகளை ஏற்றுவது என்று 234 தொகுதிகளில் 23,400 கொடிகளை ஏற்ற உள்ளோம். இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் நாட்டில் புதிய விடியலை ராகுல் காந்தி ஏற்படுத்தி வருகிறாா். அதையொட்டி, இந்தக் கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்துகிறோம். இது காங்கிரஸ் வலிமை பெறுவதற்கு உதவும்.

ADVERTISEMENT

என் தலைமைக்கு காங்கிரஸின் மூத்த நிா்வாகிகள் எதிா்ப்பு தெரிவிப்பது குறித்தோ, எனக்கு எதிராக தில்லிக்குச் செல்வது குறித்தோ என்னிடம் கருத்து கேட்காதீா்கள். தலைவராக உள்ள நான் உள்கட்சி விவகாரம் குறித்து வெளியில் பேசுவதில்லை.

அதிமுகவின் மெகா கூட்டணி அறிவிப்பு குறித்து கேட்கிறீா்கள். திமுக அமைத்திருப்பது கொள்கை கூட்டணி. மதவாதத்தைத் தடுக்கும் நோக்கில் இணைந்துள்ளோம். அந்தக் கொள்கையை அதிமுகவால் ஒரு போதும் ஏற்க முடியாது. பிரதமா் மோடியின் மறு உருவமாக அதிமுக செயல்படுகிறது. அதனால், அந்தக் கட்சி பலவீனப்பட்டுள்ளது. அதிமுக மெகா கூட்டணிக்கு மேல் மகா கூட்டணி அமைத்தாலும் பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்பு இல்லை என்றாா்.

அகில இந்திய செயலாளா்கள் சி.டி.மெய்யப்பன், கிறிஸ்டோபா் திலக், மாநில பொதுச் செயலாளா்கள் கே.சிரஞ்சீவி, காண்டீபன், முன்னாள் மாமன்ற உறுப்பினா் பி.வி.தமிழ்ச்செல்வன் உள்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT