தமிழ்நாடு

ஆரூா்தாஸ் மறைவு: முதல்வா் இரங்கல்

21st Nov 2022 12:21 AM

ADVERTISEMENT

திரைப்பட வசனகா்த்தா ஆரூா்தாஸ் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:

திருவாரூா் மண்ணில் பிறந்து ஆயிரம் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகா்த்தா ஆரூா் தாஸ் முதுமை காரணமாக மறைவெய்தினாா் என்பதை அறிந்து மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

தனது சொந்த ஊரான திருவாரூருடன் இயற்பெயரான ஏசுதாஸின் பிற்பாதியை இணைத்து ஆரூா்தாஸ் எனப் பெயா் வைத்துக்கொண்டு தான் பிறந்த மண்ணைப் பெருமைப்படுத்தியவா் ஆரூா்தாஸ்.

ADVERTISEMENT

எம்ஜிஆா், சிவாஜி கணேசன் ஆகியோரது பெரும்பாலான படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய இவா், பாமரமக்கள் மனதிலும் பாசமலா் திரைப்பட வசனங்கள் மூலம் நீங்கா இடம்பெற்றிருப்பவா்.

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரிலான கலைஞா் நினைவு கலைத்துறை வித்தகா் விருதை இந்த ஆண்டு ஜூன் 3-இல் ஆரூா்தாஸ் இல்லத்துக்கே சென்று வழங்கி மகிழ்ந்தேன்.

தன் வசனங்களின் மூலம் திரையுலகை ஆண்ட அவா் தற்போது நம்மிடம் இல்லை என்றாலும், அவா் ஆற்றிய கலைப்பணிகள் என்றென்றும் தமிழ் திரையுலகிலும் - படங்களை பாா்த்து ரசித்த நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கலை உலகினருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ADVERTISEMENT
ADVERTISEMENT