தமிழ்நாடு

குறைந்த விலைக்கு நகை வாங்கித் தருவதாக பண மோசடி: கணவன் - மனைவி கைது!

19th Nov 2022 02:07 PM

ADVERTISEMENT

சேலம்: சேலத்தில் குறைந்த விலைக்கு நகை வாங்கித் தருவதாக ஏராளமானவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலந்தூர் அருகேயுள்ள நொச்சிக்குளம் அடுத்த அருணகிரி மங்கலம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் கந்தசாமி (45). விவசாயியான இவர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்விடம் புகார் ஒன்றினை கொடுத்தார். அதில் தனக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள வீரகனூர் தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் ஆசிரியை ஷியாமளா அறிமுகமானார்.

அவரது தாயார் விஜயா, சித்தி சித்ரா, தங்கை ஜீவா, அவரது கணவர் சிவக்குமார் ஆகிய 5 பேரும் கூட்டாக சேர்ந்து, பிரபல நகைக்கடையில் இருந்து குறைந்த விலைக்கு தங்க நகை வாங்கித் தருவதாக தெரிவித்தனர்.

அதை நம்பி, கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி, குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தரக் கேட்டு,  ரூபாய் 25 லட்சம் பணத்தைக் கொடுத்தேன். என்னை போல் பலரும் அவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்தனர். ஆனால் தங்க நகை வாங்கித் தராமல் பணத்தை மோசடி செய்துவிட்டனர்.

ADVERTISEMENT

பலமுறை பணத்தைத் திருப்பிக் கேட்டும் தராமல் அலைக்கழித்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனக் கூறியிருந்தார். இப்புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டார்.

டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் எஸ்ஐ மல்லிகா மற்றும் போலீசார் விசாரித்தனர். அதில், பள்ளி ஆசிரியை ஷியாமளா, அவரது தாயார் விஜயா, சித்தி சித்ரா, தங்கை ஜீவா, அவரது கணவர் சிவக்குமார் ஆகிய 5 பேர் கும்பல், குறைந்த விலைக்கு நகை வாங்கித்தருவதாக பலரிடம் ரூபாய் 3 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, கந்தசாமியை போல மேலும் 10 பேர் புகார் கொடுத்தனர்.

இப்புகார்களின் பேரில் ஆசிரியை ஷியாமளா, ஜீவா, சிவக்குமார் உள்ளிட்ட 5 பேர் மீதும்  கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து 5 பேர் கும்பலை குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று ஆத்தூர் அருகே  மஞ்சினி பகுதியில் வசித்து வந்த ஜீவா (33), அவரது கணவர் சிவக்குமார் (38) ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் ஜீவா, ஷியாமளா ஆகியோரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் ஒன்றரை  கோடிக்கு பண பரிமாற்றம் மற்றும் நகைகள் வாங்கியதற்கான ரசீதுகள், புத்தக குறிப்புகளை போலீசார் கைப்பற்றினர்.

இதையடுத்து, கைதான தம்பதியினர் ஜீவா, சிவக்குமார் ஆகிய 2 பேரிடமும், குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்து மேற்கொண்டு பின்னர் தம்பதியரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிவக்குமாரை சேலம் மத்திய சிறையிலும், ஜீவாவை பெண்கள் கிளைச் சிறையிலும் அடைத்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள ஆசிரியை ஷியாமளா, அவரது தாயார் விஜயா, சித்தி சித்ரா ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT